உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

59

முதலரும்பு என்று கண்டால்; அதனைத் தேறும்வரை அக் கவர்ச்சியில் நின்று, தேர்ந்ததே தன்னுழைப்பு, தன்மதிப்பு தன்மேம்பாடு ஆகிய நிலத்தின் மீது நிற்கும் தகுதியும்; அதன் மீது விட்டுக்கொடுப்பு, ஒத்துழைப்பு, நேர்மை, அன்பு, தியாகம் ஆகிய சுவர்களும், கட்டுமானமும் எழுப்பும் திறமும்; இவற்றை கவித்து நற் சமூகப் பயன், புகழ் ஆகிய கூரைகள் வேயும் பண்பும் உடையவராகக் கடவர்.

இதுவரை தாய்தந்தையரிடம் பொறுப்புவிட்டு வாழ்ந்த அவர்கள், தம் நன்மை தீமைக்குத் தாய் தந்தையரே தண்டனை பெறவிட்ட அவர்கள் இதுமுதல் தம் பொறுப்பையும், துணைவர் பொறுப்பையும் தான் ஏற்கக் கடவர்; தம் நன்மையின் பயனை துணைவர்க்கும் ஈந்து, துணைவர் தீமையின் தண்டனையைத் தாமே பெரிதும்பெற முந்துறக்கடவர் ஆசிரியரிடம் வழி கேட்ட அவர்கள், அவர் வழிநின்ற அவர்கள், தாமே வழியறியவும் தம் துணைவருக்கு வழிகாட்டவும், அதே சமயம் துணைவர் வழிக்கு விட்டுக்கொடுத்து அதன் விளைவையேற்று, அவரை நல்வழிப் படுத்துவதன் மூலமே, தாம் நலம்பெறும் பண்பை அடையக் கடவர். தோழருடன் குலாவினும் தனிவாழ்வும் தனி நலனும் விடாத அவர்கள், காதலருடன் குலாவுவதுடன் அவர் வாழ்வன்றித் தமக்கென வேறு வாழ்விலா நிலையைப் பெறக்கடவர். இயற்கையின் குறிக்கோளாகிய இறைவன் நெறி எனக் காணக்கடவர்.

காதல் உணர்ச்சி இளமைப் பருவத்திற்குப் புது உணர்ச்சியும் புது அனுபவமும் ஆகும். ஆதலால் அதில் ஏற்படும் மயக்கங்களும் ஏமாற்றங்களும் எண்ணிறந்தன. இவற்றுட் சில, காதற்காலத்திலும் இளமையிலும் கசப்பு, துன்பம், பலசமயம் அழிவு ஆகியவற்றைத் தருபவை. ஆனால், இன்னும் சில இடர்கள் இளமையிற் பயன் தராமல் நீடித்த, வாழ்வில் கசப்பையும், தோல்வியையும் தருவன. இவ் விருவகை இடர்களினின்றும் காதலர் தப்பவேண்டுமானால், காதலுணர்ச்சியில் தாம் ஈடுபடு முன்பே, அதற்கான தகுதியைப் பெற முயலுதல் வேண்டும். அஃதாவது தம் வாழ்வின் முத் திறங்களிலும் சரிசமநிலை பேணுவதில் விழிப்பாயிருக்க வேண்டும். இதனை விளக்கமாகக் கூறுவதனால், இளைஞரும் நங்கையரும் உணர்ச்சி வயப்பட்டு அறிவுத் திறமிழக்கவோ,