100
அப்பாத்துரையம் - 44
மனிதப் பாறையருகிலுள்ள சிறிய குடாவளைவில் அவன் தன் பாய்க் கப்பலைச் சேர்த்தான். வரிசைப் பாறைகளில் உள்ள சிறு குகைகள் இரண்டில் ஒன்றைத் தன் கொல்லுலைக் கூடம் ஆக்கினான். மற்றொன்றினைச் சேம அறையாக்கினான். பெரிய டூவ்ரேயின் உச்சிக்குப் பெரு முயற்சியில் ஏறிப் பார்த்தான். அதனுச்சியில் பாறையின் முறிந்த பகுதிகளிடையே ஒரு ஆள் உடல் செல்லத்தக்க நீண்ட புழை கண்டு அதில் இரவு தங்கினான். இவ்விடத்தில் இதுவரை இருந்துவந்த பறவைகள் இரவில் நெடுநேரம்வரை அவனைச் சுற்றி வட்டமிட்டு அவனைத் துரத்தப் பார்த்தன. பின் தம் குடியிருப்பை மனிதனிடம் விட்டுவிட்டு அவை தம் குடியிருப்பை மனிதப் பாறைக்கு மாற்றின.
கடலில் வேலியிறங்கிய சமயம் பாறைகளுள் படிந்தும் அலைகளில் ஒதுங்கியும் கிடந்த கப்பலின் கட்டைகள், கயிறுகள், சங்கிலிகள், நங்கூரக் குண்டுகள் ஆகியவற்றை அவன் சேகரித்தான். இயந்திரச் சட்டத்தில் தன் பளு தாக்காதபடி மெல்ல ஏறிச்சென்று அதிலுள்ள பொருள்களை அகற்றி அதன் பளுவைக் குறைத்தான். அவன் சேர்த்த கட்டைகளே அவனுக்கு விறகாயின. இரும்புத் துண்டுகளே தீக்குச்சிகளாயின. கப்பலில் தொங்கிய கயிறுகளை முறுக்கி வடங்களாக்கினான். கப்பல் சட்டத்தின் நடுப்பாலம் இரும்புக் கம்பியாலானது. அதைப் பிரித்தெடுத்து, அரமாகவும் ஆணிகளாகவும் சிறுகச் சிறுக மாற்றினான். பாறையில் சுழன்றடித்த காற்றை அவன் கொல்லுலைக் குகையில் நுழையாமல் மரத்தட்டிகளால் தடுத்து, சிறு புழைகள் வழியாக வரச்செய்து அதன் மூலமே ஊதுலை உண்டு பண்ணினான்.
ஒரு வார வேலைக்குப்பின் இயந்திரத்தை இறக்கும் திட்டம் ஒரு வகையில் உருவாயிற்று. எதிரெதிரயிருந்த பாறைகளின் இடுக்கில் கட்டைத் துண்டுகளை வைத்து அடைத்து அதில் ஆணிகள் அடித்தான். இவற்றின் உதவியால் இயந்திரச் சட்டத்துக்கு மேலும் கீழும் பல குறுக்கு விட்டங்கள் பூட்டினான். அவற்றில் கம்பிகளிட்டு வடங்களின் மூலம் இயந்திரத்திலும் சட்டத்திலும் மாட்டினான். எல்லாக் கப்பிகளின் வடங்களையும் ஒரே ஒரு கயிற்றால் இழுக்கும்படி அமைத்ததுடன், தன் பளுவுக்கு மேற்படாத பளுவுடனே இயந்திரம் இயக்கப்படும்படி பல