(130) ||.
அப்பாத்துரையம் - 44
அதேசமயம் சுகதாவின் உள்ளத்தில் அவன் பெருந்தன்மை ஒரு மாறுதலை உண்டுபண்ணிற்று. 'அவர் தந்தையின் தொழிலை வெறுத்தார்; ஆனால், எனக்கு இணங்கி, அதைக் கடிந்து கொள்ளாமல் இருக்கிறார்; ஏழைகளிடம் அவருக்குப் பாசம்; ஆனால், என்னை எண்ணி, அதையும் கைவிடுகிறார்; என் கணவர் கருத்தும் செயலும் நேர்மையானவை' என்ற எண்ணம் அவளிடம் வேர்க்கொண்டது. தன்னால் அவன் உள்நெஞ்சம் அடைந்த நைவையும் அவள் ஆற்றமுற்பட்டாள். படைவீரர் நிகழ்ச்சியில் துயருக்காளான பெண்ணிடம் அவள் இயற்கையிலேயே இரக்கம் கொண்டிருந்தாள். அச்செயலைப் புகழ்ந்து, “அப்பெண் யாரென அறிந்து கூறுங்கள். சமூகம் அவளை ஏற்காவிட்டால்கூட, நான் ஏற்று, என் வீட்டில் வைத்துக்கொள்கிறேன்” என்றாள்.
பிறக்கவிருக்கும் குழந்தை அவர்களை ஏற்கெனவே இணைந் திருந்தது. சுகதாவின் புதிய கருத்துக் கனிவு அவ்விணைப்பில் பின்னும் இனிமையை ஊட்டிற்று.
அமர் ஒருநாள் கடையிலிருக்கும்போது பறட்டைத் தலையும் நீண்டு வளைந்த மீசையும் கறுத்தத் தடித்த உடலுமுடைய ஒருவன் பழக்கமானவன்போலக் கடையில் வந்து ஏறினான். தந்தையை விசாரித்து, அவர் இல்லை என்று அறிந்ததும், அவன் முதலில் தயங்கி நின்றான். பின் தன்னிடமிருந்த கெட்டிவளையல் ஒன்றை நீட்டி, என்ன கொடுப்பீர்களோ, விரைவில் கொடுங்கள்” என்றான்.
வந்தவன் காலேகான் என்பவன். தகாவழியில் துணிகரமாக அவனைப் போன்றவர் கைக்கொண்ட பொருளை, சமர்காந்த் போன்ற துணிகர வணிகர் பெற்றனர். இதனால் அவர்கள் தம் பெட்டியை நிரப்புவதுடன், அவனைப் போன்றவர்களையும் அவ்வப்போது போலீஸிடம் சிக்காது காத்து வந்தனர். அமர் பொருளை வாங்காமல் குறுக்குக் கேள்விகள் கேட்டான். காலேகான் ஒன்றும் ஒளிக்கவில்லை. தன் அவசர நிலையையும் கூறி, தடயம் நானூறு பொன் பெறுமானாலும் கொடுத்ததை அன்று பெற்றுப் போவதாகக் கூறினான். அவன் நூறு பொன்னிலிருந்து ஐந்து பொன்வரை இறக்கிக்கேட்டும் அமர் அதைத் தீண்ட மறுத்து, அவனையும் கண்டித்து அனுப்பினான்.