(138) ||
அப்பாத்துரையம் - 44
பீதிப்புயல் வீசும். இத்தகைய தறுவாயில் ஒரு நாள் பட்டாணிச்சி கோலூன்றி நடந்து அமர் வீட்டில் நுழைந்தாள். அமர் மூலம் அவள் இன்னார் என்று தெரிந்ததும் சுகதா வரவேற்றாள். அவள் அமரைப் புன்முறுவலுடன் நோக்கி “அப்பா, குழந்தை வந்தவுடன் ஏழைகளை மறந்துவிட்டாயாக்கும்! பிறந்த நாள் விழாவுக்கு எத்தனை பேரையோ அழைத்தாய். ஏழையை மட்டும் எண்ண வில்லை” என்றாள். அமர் உள்மனம் அவனைச் சுட்டது.
பட்டாணிச்சி சகீனா அரும்பாடுபட்டுப் பின்னிய தலைக்குட்டை ஒன்றைப் பிள்ளைக்குப் பரிசளித்தாள். ஏழையின் அம் மனமார்ந்த அன்புச்சின்னம் அமரைப் பணிவித்தது. சுகதாவும் பிறந்தநாள் தின்பண்டங்களில் ஒரு பொட்டலம் எடுத்துக் கிழவியின் முந்தானியில் முடிந்தாள். சிற்றுண்டி தந்தாள். பின் குழந்தை உடல் நலம் பற்றிய பேச்சு எழுந்தது. தாய் தந்தையராகியும் அனுபவமற்ற இளைஞர்கள் கவலை கண்டு கிழவி அதற்கு என்ன மருந்து தரவேண்டும், என்ன உணவு தரவேண்டும் என்ற விவரங்கள் கூறினாள். அன்றே மருந்து கொடுத்தனுப்புவதாகக் கூறினாள். அமர் அவளுடன் தானே சென்று மருந்தை வாங்கி வந்தான். அப்போது அவள் வீட்டில் வறுமை முன்னிலும் கோரதாண்டவம் செய்வது கண்டான். அவளும் மீண்டும் ஒரு தடவை கைகுட்டை சகீனா திருமணம் ஆகியவற்றை நினைவூட்டினாள். பிள்ளைப் பாசம் அவளை மறக்கடித்தது பற்றி அமரும் வெட்கமடைந்து மன்னிப்புக் கோரினான். இரண்டையும் விரைவில் கவனிப்பதாக உறுதி கூறினான். பட்டாணிச்சி சில கைக்குட்டைகளையும் இவ்வேற் பாட்டுக்காகக் கொண்டு கொடுத்தாள். பட்டாணிச்சியின் மருந்தால் குழந்தையின் உடல் முற்றிலும் குணமாயிற்று.
அன்றே சலீம், அமரை அழைக்க வந்தான். அவனிடம் அமர் பட்டாணிச்சி பற்றிய விவரங்களைக் கூறினான். சலீம் தனக்கு வழக்கமான குறும்புக் குரலில் “கைகுட்டை நன்றாயிருக்கிறது. ஆயினும் அதைக் கிழவி பின்னினாளா அல்லது இளமங்கை சகீனா பின்னினாளா என்று தெரியாமல் அதன் விலையை மதிக்க முடியாது.கிழவி பின்னியிருந்தால் அதன் விலை ஐந்து செப்புக் காசுகள், சுகீனா பின்னியிருந்தால் அதற்கு விலை ஐந்து வெள்ளிகள்” என்றான்.