உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

||--

அப்பாத்துரையம் - 44

சமர்காந்த் மனம் பிளவுபட்டது. ஆனால், அவன் மீது கோபம் கொள்ளவில்லை. அவன் வழி வேறு, தன் வழி வேறு என்பதை இப்போது முழுவதும் புரிந்து கொண்டார். “சரி, உன் விருப்பப்படி நட.ஆனால் இன்பத்திலும் துன்பத்திலும் நான் உன் தந்தை என்பதை மறக்காதே. என்னை நீ காண விரும்பா விட்டாலும்கூட எனக்கு எழுத மறக்காதே. உனக்குப் பணம் வேண்டும்போது கேட்கத் தயங்காதே. இப்போது பட்டாணிச்சி வாயடக்க என்னால் முடியாது. ஊர் முழுவதும் எழும் தீ உன்னைக் கவியுமுன் எங்காவது ஓடிப்போ” என்றார்.

ஊர்வாய் மறுநாளே அமர் குடும்பத்தின் மதிப்பைச் சுக்கு நூறாக்கிற்று. சுகதாவின் கோபம் வெறுப்பாக மாறிற்று. குழந்தையுடன் அவள் பழயபடி மாமன் வீட்டில் அடங்கிக் கிடந்தாள். சமர்காந்த் அறையைவிட்டு வெளி வருவதில்லை.

நைனா ஒருத்தி மட்டுமே உள்ளத்தில் அண்ணன் நினைவு மாறாமல் அவனைப் பற்றிய தூற்றுதலிடையேகூட அவனை வெறுக்காமல் இருந்தாள். அண்ணன் அன்பையும் அவன் தூய உயர் கொள்கையையும் அவள் போற்றினாள்.

அமர் இப்போது நாடோடியாய் ஊர் ஊராய் அலைந்தான். இன்று கண்ட முகம் நாளைக் காட்சியில் மறைக்கிறது. இன்று இருந்த ஊரில் அவன் நாளை இல்லை. நாடும், காடும், ஆறும், மக்கள் முகங்களும் ஆற்றுவெள்ளம் போல் அவனைக் கடந்து செல்கின்றன. அலைந்து காலலுத்தது. தொலை செல்லுந்தோறும் சகீனா நினைவு உள்ளத்தை அறுத்தது. எந்த ஊரிலாவது தங்கி, வாழ்விடம் ஆக்கி, சகீனாவை அங்கே அழைத்து வந்து தனி வாழ்வு வாழ அவன் விரும்பினான். மாதம் மூன்றாகியும் எந்த ஊரும் பிடியாமல் அலைந்தான்.

இரவுகூடத் தங்காமல் அலைந்து ஒரு நாள் காலை அரித்து வாரத்துக்கு அருகிலுள்ள ஒரு ஊரை அடைந்தான். இமயமலையின் அடிவாரம் ஒரு பக்கம் அவன் காலடியிலிருந்து பல அடி கீழே கிடந்தது. அதன் அடர்த்தியான, மங்கிய புகைப்படலங்கள் போன்ற கொடுமுடிகள் ஒன்றன் மீதொன்றாக வடதிசை வானை மறைத்தன. மெல்லருவிகள் தென்றலின், இள மணம் உண்டு இசை பாடின.