இருதுளிக் கண்ணீர்
163
அவனால் அவமதிப்புப் பொறுக்க முடியவில்லை. கையிலுள்ள கைத்துப்பாக்கி வெடித்தது. நைனா, அமைதித் தெய்வம், அடிவீழ்ந்து சாய்ந்ததுபோல் சாய்ந்தாள். கூட்டம் கொந்தளித்தது, மணிராம் மோட்டார் ஏறித் தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடினன்.
நைனாவின் பிணந்தாங்கிய வண்ணம், ஏழைகள் படை, கோர அமைதிப் படையாய், புயல் சுமந்து செல்லும் கடல் போலப் புரண்டு நகரவை நோக்கிற்று. நகரவையின் உறுப்பினர் உடலில் குறுதி ஓடவில்லை. யாவரும் ஒன்றும் தெரியாமல் விழித்தனர்.
தனிராம் வாய் திறந்தார். “அன்பரே, ஏழைகள் குறுதி குடிக்க உங்களைத் தூண்டிய இருவருள் நான் ஒருவன். நான் மாடிவீடுகட்ட எண்ணினேன். என் குடியை மண் ஆண்டது.இனி இதுவே உங்கள் விருப்பமானால், என்போல மக்கள் துயரால் வாழ்வு வாழ எண்ணிய தலைவரும் என்னை ஒத்த மனமாற்றம் பெறுவதானால், ஏழையர் மனையைத் தருவதாக இப்போதே போய் வாக்குக் கூறுவோம். இல்லையென்றால் இறைவன் தான் நம்மைக் காக்க வேண்டும்" என்றார்.
"இனி இறைவன்கூட நம்மைக் காக்கமாட்டார். அவர் ஏழையின் பொறுமையில் குடியிருந்தார். இப்போது அவர் கோர உருவில் நம்மீது பாய்கிறார்" என்றார் தலைவர் ஹாஃவிஸ் ஹாலம். நகரவைக் குழுவினர் குனிந்த தலையுடன் முன்னேறி, ஏழைப் படையணி முன் வந்து நின்றனர்.
"உடன்பிறந்தார்களே,
உங்களைத் துயரப்படுத்தி உருக்குலைத்து வந்த எங்கள்மீது கருணை காட்டுங்கள். நீங்கள் போராடிய நிலம் இனி உங்களுடையது. இனி நீங்களே நகரின் மன்னர். உங்கள் உரிமைகள் எதிலும் நாங்கள் இனிக் குறுக்கிடமாட்டோம்" என்று மன்றாடினார் தனிராம்.
மக்களிடையே களிப்பு இல்லை. ஆனால், வெற்றியின் பெருமிதம் துயரை வீறுபடுத்தியது. "வாழ்க தியாக அணங்கு நைனா! வாழ்க அமர்காந்த்" என்று மூலையில் எழுந்தது ஒரு குரல். “வாழ்க நைனா! வாழ்க அமர்! வாழ்க சுகதா!” எனத் தியாகிகளின் பெயர்கள் மக்கள் உள்ளத்திலிருந்து எழுந்து முழங்கின.