180
அப்பாத்துரையம் - 44
வாழ்வில் புதுப் படைப் பாற்றலும் ஏற்பட முடியாது. தமிழர் நற்பண்பே அதற்குரிய வித்தாகவும், தமிழ்ப்புலவர், மொழியறிஞர் ஆகியவர்களின் இலக்கிய அறிவும், மொழியறிவும், நாகரிக அறிவுமே அதன் நிலமாகவும் உரமாகவும், ஆங்கிலங்கற்ற அறிஞரின் பொது அறிவே அது ஒங்கி வளர உதவும் வான வெளியாகவும் இருக்க முடியும்.
இம் மரபுகள் ஒன்றுபடத் தமிழகத்தின் வித்தும் நிலமுமா யியங்கும் தமிழ்ப்புலவர் நிலையும், தமிழர் நிலையும் உயர்ந்து அவர்களிடையே உலகப் பொது அறிவு வளர வேண்டியது இன்றியமையாதது. எனவே, பொதுவாகத் தமிழகப் பொது மக்களிடையேயும், சிறப்பாகத் தமிழ்ப் புலவர்களிடையேயும் உலகப்பொதுஅறிவைப் பரப்பும் முயற்சிகளுள் ஒன்றாகவே இந் நூல் எழுதப்பெறுகிறது. அத்துடன் பிறமொழி வாயிலாக அறிவு பெறுபவர்களும் அறிவின் தாய் நிலமாகிய தமிழறிவு குன்றியும் தமிழகப் பிற உலகத் தொடர்புகளைக் கவனியாதும் இருந்து வருகின்றனர். அவர்களிடையேயும் தமிழார்வத்தை மட்டுமன்றித் தமிழறிவையும் அவர்கள் பொது அறிவின் துணைக்கொண்டே தூண்ட இந் நூல் பயன்படும் என்று கருதுகிறோம்.
உலகில் அரசுகள் பல தோன்றி வளர்ந்து மறைந்துள்ளன. ஆனால், அரசுகள் மறைந்தாலும் நாட்டு வாழ்வு தொடர்ந்திருப் பதுண்டு. இதுபோல நாடுகள் அழிந்தாலும் நாட்டின் நாகரிகம் பிற நாடுகளின் நாகரிகத்துடன் ஒன்றுபட்டு வளர்ச்சி பெறுவதுண்டு. ஆனால், நாகரிகம் அழிந்தாலும் அழியாது புகழ்தருவது இலக்கியமே. ஆகவேதான், இலக்கியமும் மொழியும் நாட்டின் அருஞ் செல்வப் பெட்டகமாகப் பேணத்தக்கவை களாயுள்ளன. உலகின் ஒருபாதி ஆண்டும், முழுப்பகுதியிலும் குடியேற்ற வாணிக அரசு செலுத்தியும் வரும் ஆங்கிலேயர் “எம் பேரரசை இழக்கத் துணியினும் துணிவோம் எங்கள் ஷேக்ஸ்பியரையும், அவர் மொழியாம் ஆங்கிலத்தையும் இழக்க ஒருப்படோம்” என்று கூறுகின்றனர். நாட்டு வாழ்வு, மொழி வாழ்வு ஆகியவற்றின் முழு மலர்ச்சியான இவ் விலக்கியத்தின் வரலாறு அறிபவர் நாட்டை முழு அளவும் அறிந்தவர் ஆவர். நாடுகளை ஒருவர் நேரில் கண்டு பழகியறிதல் அரிது. ஒரு