192
அப்பாத்துரையம் - 44
தலைமையான உறுப்பினருள் ஒருவனான ஒடிஸியஸ் அல்லது உலிஸெஸ் தன் நாடு திரும்பும் வழியில் கண்ட மயிர்க்கூச்செறி விக்கும் நிகழ்ச்சிகளைக் கூறுவது. இவ்விரு நூல்களும் இந்திய உலகின் இராமாயண பாரதங்கள் போன்ற சிறப்புடையவை.
ஹோமரின் காவியம் 12 அசைகளையுடைய அடிகளாலான தாய், வீறும் அமைதியும் பெருமிதமும் கொண்ட நடையை உடையது.போரும் காதலும் மாறிமாறி இடம் பெறினும் போரே முதன்மை இடம்பெறுகிறது. பலவகை மெய்ப்பாடுகளையும் உளப்பாடுகளையும் ஒருங்கே தீட்டும் திறனிலும் கவிதை அகலத்திலும் உயர்விலும் ஹோமர் உலகின் ஒப்புயர்வற்ற முதல் கவிஞர்களான ஷேக்ஸ்பியர், தாந்தே, காளிதாசன், இளங்கோ முதலிய புலவர்களிடையேயும் சிறப்புமிக்கவராகக் கருதப் படுகிறார். அவரது ஒடிஸி மயிலிராவணன் கதை, விக்கிர மாதித்தன் கதை, அருச்சுனன் யாத்திரை போன்ற நிகழ்ச்சித் தொடர்ச் சித்திரம்.
ஹோமருக்குப்பின் முதற்காலத்தில் ஸைமனிடிஸ், பின்டார் முதலிய உள்ளுணர்வுக் கவிஞர்கள் தோன்றினர். இவர்கள் யாழில் வைத்தும் பாடத்தக்க இனிய பாடல்கள் இயற்றினர். முன்னவர் பாக்கள் கனிவும் அவலச் சுவையும் மிக்க இரங்கற்பாக்கள். பின்னவர் பாக்கள் விழாக் காலங்களில் தேவர் பெருஞ் செயல்கள், வீரர் வீரம் ஆகியவற்றைப்பாடும் வீரப்பாடல்கள்.இவை ஆடற் பாட்டுகள் எனப் பெயர் பெற்றன.
L
இரண்டாவது பகுதியான பொற்காலத்தில் நாடகங்கள், வரலாறுகள், பேருரைகள், மெய்விளக்க நூல்கள் ஆகியவை தழைத் தோங்கின. கிரேக்க நாடகம் அந்நாட்டின் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய டயானியஷியஸின் வெறியாட்டு விழாவின் ஆடல் பாடலில் தோன்றியது. தமிழர் குறிஞ்சித் தெய்வமான முருகன், வேலன்மீது வெறியாடுவது போல டயானிஷியஸ் தானாகவே ஒரு தலைவன்மீது வெறிகொண்டு தன் பீடும் பெருஞ்செயலும் கூறி ஆடுவான்.பின்னாளில் ஆடுபவனான தலைவனுடன் பாடப் பாடகர் குழு அமைந்தது. அதில் ஒருவன் தலைவனுடன் பேசலானான்.பின் வேறுபலர் சேர்ந்து நாடகமாடினர்.