1. முதலாளித்துவ நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி
இன்று நம்மைச் சுற்றிலும் ஒரே குழப்ப நிலைமை காணப்படுகிறது. நடுக்கம் தரும் இடுக்கண்களே எங்கும் நிறைந்துள்ளன.
ஒருபுறம் தொழிலில்லாத் திண்டாட்டம் பரவுகிறது. கோடிக்கணக்கான உழைப்பாளிகள் எல்லையற்ற வறுமைக் கடலுளாழ்ந்து தவிக்கின்றார்கள். என்றென்றைக்கும் அவர்கள் கட்டை வெட்டிகளாகவும், ஏற்றமிறைப்பவர்களாகவும் மட்டுமிருக்க வேண்டுமென்ற தலையெழுத்துக்கு ஆளாகி யுள்ளார்கள். ஓய்வின் ஆறுதலோ, ஊதியத்தின் ஆர்வமோ அவர்களை எட்டிப் பார்ப்பதற்கில்லை.
ஆனால், அவர்களுக்கெதிராக மறுபுறமோ பணப்பைகள் மீது புரளும் ஒருசில சோம்பர்களடங்கிய சிறுகூட்டம்! அவர்களுக்குப் போதிய அளவைவிட எவ்வளவோ மிகுதியாக, செரிக்கக்கூடிய அளவுக்கும் எவ்வளவோ கூடுதலாக, பொருளும் மற்ற வாழ்க்கை வசதிகளும் குவிந்து கிடக்கின்றன. அவர்கள் செல்வம் உலகிற்கு மட்டுமின்றி அவர்களுக்கே ஒரு சாபக்கேடாய் கிடக்கின்றது.
இவ்விரு திறத்தினர்களையும் வளர்ச்சியடையச் செய்து கொண்டிருக்கும் இன்றைய நாகரிகம் எங்கே போய் முடியுமோ? என்று பகுத்தறிந்து சிந்திக்கும் எந்த அறிஞரும் கேட்காதிருக்க முடியாது. தற்கால சமூக அமைப்பு முறையில் இத்தீங்குகளை மென்மேலும் வளர்க்க என்னதான் கோளாறு இருக்க முடியும்? இக்கோளாற்றை அகற்றும் வலியுள்ள மாற்று எதுவும் கிடையாதா?