உலக இலக்கியங்கள்
197
3. ஜெர்மன் இலக்கியம்
தற்கால ஐரோப்பிய மொழிகளுள் ஆங்கிலம், பிரஞ்சு ஆகியவற்றுடன் ஒப்பாக முதன் மொழியாய்க் கருதப்படுவது ஜர்மன் மொழி. ஆங்கிலம் பிரஞ்சு ஆகிய மொழிகளின் தலைமை ஓரளவேனும் அந் நாடுகளின் பேரரசுப் பரப்பு, குடியேற்றப் பரப்பு ஆகியவற்றின் பயன் ஆகக்கூடும். ஜெர்மன் மொழியின் தலைமையோ பெரிதும் அறிவியல், கலை, இலக்கியத் துறை விரிவையே பொறுத்ததாகும். இன்று வாணிக முறையில் உயர்தரக்கல்வி வேண்டுவோர் ஆங்கிலத்தையும் கலைத்துறை பயிலுவோர் பிரஞ் சையும் அறிவாராய்ச்சித் துறைகளில் பயில்வோர் ஜெர்மனையும் கட்டாயமாகப் படித்தாக வேண்டும். உலகின் அறிவு நூல்களின் மொழிபெயர்ப்புக் களஞ்சியமான ஆங்கிலத்தில் கூடப் புற்றீசல் போல் நாள்தோறும் கிளம்பும் ஜெர்மன் அறிவியல் நூல்களை மொழி பெயர்த்துத் தள்ள முடியவில்லை என்றால் அந் நாட்டின் அறிவியல் முன்னேற்றத்தை அளவிடக்கூடுமோ?
இன்றைய விஞ்ஞானத் துறைகளில் பலவற்றை முறையாகத் தோற்றுவித்த பெருமை கிரேக்கருக்குரியது. அடுத்தபடி அழகுக் கலை, மொழியியல் முதலிய புதுத் துறைகளை வகுத்த பெருமையும் பழந்துறைகளாகிய இசை, மெய் விளக்கம் முதலியவற்றில் புத நெறியும் புரட்சிகரமான முன்னேற்றமும் உண்டு பண்ணிய பெருமையும் ஜெர்மனிக்கே உரியது.
இலக்கியத்திலும் கழிந்த மூன்று நூற்றாண்டுகளுக்கிடையே ஷேக்ஸ்பியருக்கு ஒப்பான ஆழமும் உயர்வும் அகலமும் ஒருங்கே கொண்ட இலக்கியப் படைப்பாளர் ஜெர்மன் கவிஞரான கெதே ஒருவர்தான்.