4. சீன இலக்கியம்
1. நாட்டின் தனிச்சிறப்புகள்
பெயரளவில் எல்லா நாட்டையும் போலச் சீனத்தையும் ஒரு நாடு என்று கூறினாலும் உண்மையில் அதை ஒரு கண்டம் என்றோ, ஒரு தனி உலகம் என்றோகூடக் கூறலாம்.
சீனம் மூவாயிரங் கல் நீளமும் மூவாயிரங் கல் அகலமும் உடையது. பரப்பளவில் இந்தியாவைப்போல மும்மடங்கு கொண்டது. மக்கள் தொகையில் இந்தியா உலகில் ஐந்தில் ஒரு பங்கு; சீனம் நான்கில் ஒரு பங்கு பரப்பில் அது ரஷ்யாவுக்கடுத்த பெரிய நாடு; மக்கள் தொகையில் எல்லா நாடுகளிலும் முதன்மை உடையது.
பரப்பு, மக்கள் தொகை ஆகியவற்றில் எப்படியோ அப்படியே மொழிப்பரப்பு, பழமை, வாழ்வுக்காலம், இலக்கியப் பரப்பு ஆகிய எல்லா வகையிலும் அது பிற நாடுகளின் அளவைக் கடந்து பெரும் பேரளவுடைய தாயிருக்கின்றது.
சீனநாடு உலகில் தொன்மைமிக்க நான்கு பகுதிகளில் ஒன்று அதனை ஒத்த பழமையுடைய மற்றப் பகுதிகள் எகிப்து, ஆசிரியா, திராவிடம் (அதாவது திராவிட இந்தியா) ஆகியவைகளே.
சீன வரலாற்றின் தொடக்கக் காலம் கி.மு.3000 ஆகும். கி.மு. 3000 முதல் இன்றளவும் தொடர்ச்சியாய் 5000 ஆண்டுகளாகச் சீனம் தொடர்ந்த ஆட்சிமுறை, உயர் நாகரிகம், இலக்கிய வளம் ஆகிய வற்றை உடையதாயிருந்து வருகிறது. திராவிட இந்தியா ஒன்று நீங்கலாக இவ்வளவு பழமைக்கால முதல் இன்றளவும் தழைத்து வரும் நாகரிகம் உலகில் வேறெதுவும் கிடையா தென்னலாம். திராவிடமாவது இந்தியப் பரப்பு முழுவதிலு