உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

(211

மிருந்து படிப்படியாகத் தேய்வுற்றுத் தென்கோடியில் ஒரு சில கோடி மக்களளவிலேயே உயிர்ப்புடன் நிலவுகின்றது. ஆனால், சீனம் அன்று முதல் இன்றளவும் தனிப்பரப்பும் விரிவும் குன்றாது இன்றும் உலகின் முதன் மொழியாய் இயங்குகிறது. உலகமொழியென்று கூறப்படும் ஆங்கிலத்தைப் பேசுவோர் தொகை 20 கோடியே என்பதையும், சீனம் பேசுவோர் தொகை அதன் இரட்டிப்புக்கு மேற்பட்டது (50 கோடி) என்பதையும் மறக்கலாகாது.

சீனம் போலவே இந்தியாவும் ஒரு கண்டம் அல்லது ஓர் உலகமாய் இலங்கினும், இந்தியா பல இனம், மொழி, நாகரிகம், சமயம் ஆகியவற்றால் உருக்குலைந்து ஒரு நாடு என்னும் தன்மை இழந்து நிற்கிறது. சீனாவோ 50 கோடியும் ஒரு மொழி பேசுவதாய்க் கிட்டத்தட்ட ஒரே சமயப் பரப்புடையதாயிருந்து வருகிறது.

2. சீனமொழி இயல்பு

சீனமொழி பலவகையில் உலகின் மற்ற மொழிகளினின்றும் அடிப்படைப் பண்புகளில் மாறுபட்டது. அதன் சொற்கள் முழு வதும் ஓரசை (அதாவது ஒரு நேரசை)ச் சொற்களே. அஃதோடு இச் சொற்கள் வேற்றுமை, வினைத்திரிபு ஆகிய எவ்வகை மாறுபாடு மில்லாமல் இருக்கின்றன. எனவே, சீன மொழியில் இலக்கணத்துக்கே இடமில்லாமல் போயிருக்கிறது. சொற்கள் திரியாத இந் நிலையை மொழி நூலார் பிரிநிலை என்பர். வடமொழி போன்ற பிற மொழிகளின் நிலை திரிபியல் நிலை ஆகும்.

எழுத்து வகையிலும் சீனம் மிகப் புதுமை வாய்ந்தது. மற்ற மொழிகளில் ஒவ்வோர் ஒலியையும் குறிக்க ஓர் எழுத்து இருக்கும். எனவே, நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்கள் வரம்புக்குட்பட்ட வையாயிருக்கின்றன. ஆங்கிலத்தில் 26 எழுத்தும், உருதுவில் 36 எழுத்தும், வடமொழியில் 51 எழுத்தும், தமிழில் 31 எழுத்தும் இருக்கின்றன. ஆனால், சினத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் கிட்டத்தட்ட ஓர் எழுத்து வேண்டப்படுகின்றது. ஆகவே,பள்ளிப் புத்தகங்கள் இயற்றுவதற்குக்கூட 9000 எழுத்துக்கள் வேண்டும். மொத்த எழுத்துக்கள் 40,000க்கு மேற்பட்டவை.