2. முதலாளித்துவம் என்பது யாது?
நம் தற்போதைய சமூக அமைப்பு முறை முதலாளித்துவம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. 'முதல்' ‘முதலாளித்துவம்’ என்ற சொற்களை நாம் அடிக்கடி சொல்லுகிறோம், சொல்லக் கேட்கிறோம். ஆகவே அச்சொற்களின் பொருளைத் தெளிவாகவும் திண்ணமாகவும் அறிய முயல்வோம்.
முதல் என்ற சொல்லின் பொருள் பொதுவாக நன்கு உணரப்படுவதொன்றேயாகும். நம் நண்பர் ஒருவர் ரூ.1000 முதலிட்டு ஒரு சிறிய கடை திறக்கிறாரென்று வைத்துக் கொள்ளுவோம். அந்த ரூபாய் ஆயிரத்தை நாம் 'முதல்' என்கிறோம். பொருளியல் நூலார் வருவாய் தருவதற்குரிய எல்லா வகை செல்வப் பகுதியையும் முதல் என்றே குறிக்கின்றனர். இயந்திரங்கள் தொழிற்சாலைகள் முதலிய யாவையும் முதலாளிக்கு ஊதியம் தர உதவுபவையேயாதலால் அவைகளனைத்தும் முதலுள் அடங்கும்.
ஆனால், முதலாளித்துவம் என்ற சொல் முதலினை, அதாவது உற்பத்தியின் கருவிகளைக் குறிக்க வழங்குவதன்று. உண்மையில் நேர்மாறாக அது சமூகத்தை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் ஒரு திட்ட அமைப்பேயாகும். ஒரு பிரிவு உற்பத்திக் கருவிகளை உடையது. அது - முதலாளி வகுப்பு எனப்படுகிறது. மற்றொரு பிரிவு உற்பத்திக் கருவிகளெதனையும் உடையதாயிராமல் உழைப்புத் தொழில் செய்பவர்களை மட்டுமே கொண்டது. இது உழைப்பாளர் வகுப்பு (Proletarian Class) எனப்படுகிறது.செல்வ உற்பத்திக்கு முதலும் உழைப்பும் பெரிதும் இன்றியமையாதவை. உற்பத்திக்குத் துணைக் கருவிகள் ஒரு புறமும் உற்பத்தி வகையில் அவற்றை ஈடுபடுத்தும் ஆட்கள் ஒருபுறமும் இருந்து தீர வேண்டும். ஆகவே, முதலாளித்துவ