உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

19. பாஸன் நாடகங்கள்

317

காளிதாசனுக்கு முற்பட்டவரான பாஸன் பெயரால் வெளியிடப்பட்டுள்ள திருவனந்தபுரம் நாடகங்கள் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் மலையாள நாட்டில் வழங்கியிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு. பாஸனே தென்னாட்டவனாயிருக்கக் கூடுமானால், அவன் காளிதாசனுக்கு முற்பட்டுச் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்தவனாகக் கொள்ளுதல்கூடப் பொருந்தக் கூடியதே. ஆயினும், மலையாளத்தில் வடமொழி நாடகங்கள் எழுதப்பட்ட காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு ஆதலால், இவை கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக்குரியவை என்பதிலும் பொருத்தம் உண்டு. இந் நாடகங்களில் உதயணன் கதையை அடிப்படையாகக் கொண்டவை, பாரதத்தை அடிப்படையாகக் கொண்டவை, இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டவை என மூன்று பகுதியும் உண்டு. மூன்றும் ஒரே புலவனால் இயற்றப்பட்ட வைதானா என்பதும் இன்னும் கொள்கை வேற்றுமைக்குரிய செய்தியாகவே இருந்துவருகிறது. இவற்றுள் உதயணன் கதையை அடிப்படை யாகக் கொண்ட வாசவதத்தை கனவு (ஸ்வப்ன வாசவதத்தம்), யௌகந்தராயணன் சூளுறவு (ப்ரதிக்ஞா யௌகந்தராயணம்) என்பவையே சிறந்தவையாகக் கொள்ளத்தக்கன.

9ஆம் நூற்றாண்டில் பட்டநாராயணன் என்பவரால் திரௌபதி குழல் முடித்தல் பற்றிய வேணீ சம்ஹாரமும; 10 ஆம் நூற்றாண்டில் இராசசேகரனால் கர்ப்பூரமஞ்சரி, வித்தசால பஞ்சிகை, பாலராமாயணம், பாலபாரதம் முதலியவையும்; தாமோதரமிச்ரன் எழுதிய மகாநாடகம் என வழங்கும் அனுமான் நாடகமும் பிற்கால வைணவர்களால் சமயச்சார்பு காரணமாகப் பெருவழக்குப் பெற்ற நாடகங்கள் ஆகும். 11 ஆம் நூற்றாண்டில் கிருட்டிணமிச்சரால் இயற்றப்பட்ட ‘பிரபோத சந்திரோதயம்’ ஆங்கில மொழியிலுள்ள இரட்சணிய யாத்திரிகம்' போல் பண்புகளை உருவகப் படுத்திக் கதையாக்கிய வேதாந்தத் தொடர் உருவகக் கதைநாடகம். வடமொழியில் இப்புதுத்துறை புகுந்த நாடகம் இதுவே.