உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




320

அப்பாத்துரையம் - 44

தசகுமார சரிதம் வடமொழியின் புனைகதை நூல்களில், இலக்கியப் பண்புகளில் தலைசிறந்தது. முதிர்ச்சிக் காலத்தின் தொடக்கத்திலிருந்த இவர்தம் அணியிலக்கணத்தில் விதர்ப்ப, கௌட நெறிகளை வகுத்துக் கூறியும் முந்தியதையே பெரிதும் தழுவுகின்றார்.

தண்டி, பாமஹன் ஆகியவர்களைப் பின்பற்றி 12ஆம் நூற்றாண்டுக்குள் வாமனன், உத்படன், ருத்ரடன், ஆனந்த வர்த்தனன் ஆகிய பலர் அணிநூலாராய்ச்சியி லீடுபட்டனர். ஆனந்தவர்த்தனர் த்வனியாலோகத்தில் கவிதையின் உயிர்நாடி த்வளி அல்லது குறிப்பே என்று கூறினார்.

23. சமயத்துறை உரைநடை

வடமொழியில் உரைநடை தனி இலக்கியத் துறையாக வளர வில்லை. கதையிலக்கியத்தில் அது கவிதை போன்ற கடுநடை பேணிற்று. ஆனால், நல் இலக்கியம் என்று கூறமுடியாத சமயநூல் துறையில் ஒப்பற்ற உரைநடைத்துறையாளர் ஒருவர் எழுந்தார். இவரே கேவல அத்துவைத வாதியாகிய சங்கரர். இவர் வடமொழியில் நல்ல பேச்சாளர். இந்தியா வெங்கும் சென்று புத்தர்களையும் ஏனைய கோட்பாட்டினரை யும் வாதிட்டு வென்று தம் கோட்பாட்டை நிறுவினர். மலையாள நாட்டில் (காலடியில்) பிறந்து காஞ்சியில் வாழ்ந்த இவர் உபநிடதங்கள், பிரமசூத்திரம் முதலிய பல நூல்களுக்கு உரைகண்டார். இவ்வுரைகளில் அவரது ஒப்பற்ற மொழிப் புலமையும், சொல் திட்பமும், பொருள் நுணுக்கமும் வெளிப்படுகின்றன.

24. சங்கரர் பத்தி நூல்கள்

சங்கரரே வடமொழிக் கவிதையிலும் ஒரு புத்தம்புதுத் துறை வகுத்தவர் ஆவர். தமிழில் 7-9 நூற்றாண்டில் பேரளவில் எழுந்த பத்தி நூல்களை ஒட்டி இவர் வடமொழியில் சியாமளா தண்டகம், சிவானந்தலகரி, சௌந்தர்ய லகரி ஆகிய இனிய பத்தி உணர்ச்சிப் பாக்கள் இயற்றினார். இவற்றுள் சியாமளா தண்டகம் நீண்ட யாப்பு முறையிலமைந்த இசைப் பாடல்கள். திருநாவுக்கரசர் தாண்ட கங்களை இவை நினைவூட்டவல்லன.