20
அப்பாத்துரையம் - 44
பயன்படுத்தி,அதன் விளைவாக ஆதாயத்துடன் விற்கும் அளவின் எல்லையை விட, மிகுதியாக உற்பத்தி செய்து விடுகிறார்கள். விற்பனையிலேற்படும் போட்டி, விலையை இறக்கி விடுகிறது. இறுதியாக விற்பனையாளர்கள், விற்பதைவிடச் சேகரித்து வைப்பதே மேலென்று எண்ணிவிடுகிறார்கள். ஆகவே தொழிற் சாலைகள் மூடப்படுகின்றன. பணியாளர்கள் வேலையில்லாது விடப்படுகின்றனர். சேகரித்து வைக்கப்பட்ட உற்பத்திச் சரக்குகள் படிப்படியாக விற்பனைக் களத்தில் செலவான பிறகுதான் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஆதாயமிக்க சில ஆண்டுகளில் உற்பத்தி மிகவும் ஊக்கப்பட்டு அதன் எல்லை கடந்த அளவினால் உற்பத்திப் பெருக்கம் என்று கூறப்படும் நிலை வந்துவிடுகிறது. எல்லாத் தொழில்களிலுமே இங்ஙனம் தேவைக்குமேல் உற்பத்தி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
55
ஆயினும், பொருளியல் புலவர்கள் பொது உற்பத்திப் பெருக்கம் என்ற ஒன்று இயல்பாக என்றுமே ஏற்படாதது என்று கூறுகின்றனர். "மிகுதிச் சரக்குகளையும் முன்னிலும் நல்ல சரக்குகளையும் சமூகம் விரும்பி ஏற்கும் தேவையின் அளவு செயல் முறையில் எல்லையற்ற விரிவுடையதே. சராசரியாக மனிதன் எப்போதுமே தான் உற்பத்தி செய்யும் பொருள் களனைத்தையும் பயன்படுத்துவது கூடுமான ஒரு செயலே யாகும்” என்று அவர்கள் கூறுகின்றனர்.புலவர்களின் இக்கூற்று உண்மைதான்.ஆகவே முதலாளித்துவ சமூகத்தின் உண்மையான கவலை உற்பத்திப் பஞ்சம் என்று கூற முடியாது. அதோடு உற்பத்திப் பெருக்கம் ஒருபுறம் இருக்கும்போதே, பட்டினி கிடந்தும் உணவு போதாமலும் இறப்பது மற்றொருபுறம் நடை பெறுகிறது என்பது விளக்கப்பட வேண்டிய செய்தியேயாகும்.
ஒவ்வொரு உற்பத்தி முயற்சியாளனும் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காகக் கூலியைக் குறைக்க வேண்டி வருகிறது. ஆனால், கூலி குறைந்ததும் பொது மக்களின் பொருள் வாங்கும் ஆற்றல் தானாகவே குறைந்து விடுகிறது. அதன் விளைவாகப் பொருளும் உற்பத்தியாகி, தங்களுக்குத் தேவைப்படுவதாயிருக்கும்போதுகூட,மக்கள் அவற்றை வாங்க முடியவில்லை. அதனால் செலவுக்குறை (under-consumption) ஏற்படுகிறது.