22
அப்பாத்துரையம் - 44
நெருக்கடி இவையெல்லாவற்றையும் விட மிகக் கடுமையா யிருந்தது. இத்தகைய நிலைமை ஏற்பட்டே தீரும் என்று மார்க்ஸ் இன்னமே கூறியுள்ளார் என்பதைக் 'கோல்' எடுத்துக் காட்டுகிறார்.
'விஞ்ஞானப் புதுமைகள் பெருக்கமடையுந்தோறும், தொழில் முறைப்படி முதலாளித்துவத்தினால் திறம்பட உற்பத்தி செய்யப்படக்கூடும் பொருள்களுக்கு, அதன் எல்லைத் திறத்திற்குள்ளாகச் செலவீடு கிடைக்காத காரணத்தினால், முதலாளித்துவம் தன்னைத்தானே முறியடித்துக் கொள்ளும்’ என்று அவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கண்டுணர்ந்தார். உற்பத்திக்கொப்பாக, செலவீட்டையும் விரிவுபடுத்தினாலன்றி, மூலப்பொருள் வளங்களாலும், உற்பத்திச் சாதனங்களின் பெருக்கத்தினாலும் தொழிலில்லாத் திண்டாட்டமும் பொருளியல் நெருக்கடிகளும் ஏற்படுவது உறுதி. வேண்டாத உற்பத்தியைப் பேரளவில் குறைக்க முற்பட்டால் மட்டுமே அதாவது பல உற்பத்தி ஆலைகள் அழிக்கப்பட்டு, பல நிலையங்கள் ஒடுக்கப்பட்டால் மட்டுமே முதலாளித்துவ முறை திருத்தியமைக்கப்படக் கூடும்.
மேற்கூறியவைகளனைத்தும் போட்டியடிப்படையில் அமைந்த முதலாளித்துவத்தில் உள்ளூர ஊறிக் கிடக்கும் ஓர் அடிப்படை முரண்பாட்டின் பயன் ஆகும். முதலாளித்துவ முறை சமூக முறை அல்லது கூட்டு முறைப்படி உற்பத்தியில் முனைகிறது. அதைப் பயன்படுத்தும் துறையில் மட்டும் அது தனி மனிதர் போட்டிக்கும் சுரண்டலுக்கும் உடன்படுகிறது. இம்முரண் பாட்டின் வெளிச் சின்னமே இன்ப வகுப்பினருக்கும் உழைப்பாளி வகுப்பினருக்கும் இடையே நிகழ்ந்து வரும் போராட்டமாகும். இதில் இன்ப வகுப்பினர் தனிமனிதர் சொத்துரிமைக்கும், சுரண்டலுரிமைக்கும் போராடுகின்றனர். உழைப்பாளி வகுப்பு சமூக மயமாக்கப்பட்ட தொழிலுக்கும் கூட்டு உற்பத்தி முறைக்கும் போராடுகிறது.