உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 44

கிட்டும் பங்கு, அதன் பயனாய் அவர்கட்குக் கிடைக்கும் வாழ்க்கை வசதிகள் ஆகியவை பற்றியது. சமதர்மிகள் கண்டனத்தின் இவ்விரண்டாம் பகுதி முதற்பகுதியை விடக் காரசாரமானதும் விரிவானதும் ஆகும். நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி உழைக்கும் வகுப்பைச் சுரண்டி வாழ்வதே முதலாளித்துவத்தின் அடிப்படையாகும். தொழிலாளர்களில் பெரும்பாலோர் 'கூலி அடிமைத்தனம்' எனப்படும் நிலைமையில் உழல்கின்றனர்.

-

முதலாளித்துவத்தின் கீழ் உழைப்பாளிகளின் நிலையை இங்ஙனம் அடிமை நிலை என்று கூறுவது நேர்மையல்ல வென்றும், உழைப்பாளிகளின் தங்கள் வேலைகளை விட்டு விட்டு எங்கே செல்வதற்கும் யாரும் தடை செய்வதில்லை என்றும், ஆகவே அவர்கள் அடிமைகள் போன்றவர்களல்லர் என்றும் முதலாளிகள் கூறுவதுண்டு. ஆனால், சமதர்மிகள் இதற்குக் கூறும் விடை யாதெனில், 'தொழிலாளிகள் கொள்கையளவில் சுதந்திர மனிதர்களே' ஆனால் செயலளவில் அடிமைகள் நிலையிலிருந்து வேறுபட்டவர்களல்லர். 'உழைப்புக்கான சாதனங்களனைத்தையும் கைப்பற்றியிருப்பதன்மூலம் முற்காலங் களிலுள்ள எந்த அடிமை முதலாளிக்குமில்லாத கொடுங் கோன்மையுரிமை இன்றைய தொழில் முதலாளிக்கு ஏற்பட்டிருக் கிறது. தற்காலத் தொழிலாளியை அவன் முதலாளிக்கே வேலை செய்யும்படி கட்டுப்படுத்தச் சட்ட முறைப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் வாழ்க்கைச் சாதனங்கள் வகையில் முதலாளி அடைந்துள்ள ஏகபோக நிலைமை எந்தத் தாள் சட்டக் கட்டுப்பாட்டையும்விட வலுவானது. பழைய அடிமைத்தனத்திற்கும், புதிய அடிமைத்தனத்திற்கும் இடையே யுள்ள தலைமையான வேறுபாடு யாதெனில் தற்கால அடிமை முதலாளிக்குத், தன் அடிமைகளை பட்டினியில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைப்பாடுகூட இல்லை என்பதே. வேலை தொடங்குவது எப்போது, எவ்விடத்தில் என்பதையும், யாரை வேலையிலீடுபடுத்துவது, யாரை நீக்குவது என்பதையும் எத்தகைய வேலை செய்வது என்பதையும் முதலாளியே அறுதி செய்தல் வேண்டும். முதலாளியன்றி வேறு எவரும் அறுதியிட முடியாது.