போதும் முதலாளித்துவம்
35
கீர் ஹார்டி கூறுவதாவது: "உழைப்பாளி, தான் ஒருபழைய அடிமை முறையைவிட்டு, ஒரு புதிய அடிமை முறைக்குத்தான் மாறியிருக்கிறோம், என்று கண்டு கொண்டு விட்டான். ரோம்கால அடிமை, முதலாளியின் தோல்வாரினது கசையடியைவிட இன்றைய வயிற்றுப் பசியடி எத்தனையோ கொடுமையானது. தொழிலாளருக்கு இன்று வேலை கோரும் சந்தர்ப்பம் இல்லை, யாரும் அவனுக்கு வேலைதர வேண்டிய கடப்பாடு உடையவர் அல்லர். அன்றி அவன் தானே தன் வேலையைச் செய்யவாவது சுதந்திரமுடையவனா என்றால், அதுவுமில்லை. ஏனெனில், உழைப்பதற்காதாரமான நிலமும் அவனிடம் இல்லை, அதற்கு வேண்டிய முதலுமில்லை. உணவு கிடைக்குமிடம் தேடிச் சென்ற பழங்கால நாடோடிகள்போல் எந்த நிமஷத்திலும் வேலையைவிட்டு வேலையுள்ள இடம் நாடிச்செல்ல அவன் சித்தமாயிருக்க வேண்டும்.
“அவன் பட்டினி கிடக்காலம் ஆனால், உணவு உற்பத்தி செய்ய முடியாது. அவன் ஆடையின்றி இருக்கலாம், ஆடை நெய்ய முடியாது, வீடற்றவனாயிருக்கலாம்- வீடுகட்டிக்கொள்ள முடியாது, வேலை செய்யும்போது அவன் வேலை செய்யும் தொழிற்சாலையின் நடைமுறை விதிகள்மீதும் அவனுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. எந்த வேலையைச் செய்ய வேண்டு மென்று உறுதி செய்வதும் அவனுக்கு அப்பாற்பட்டது. சொன்னதைச் செய்வதென்பதனுள் அவன் கடமைகள் தொடங்கி முடிவடைகின்றன. பக்கத்து இருக்கையிலுள்ள தொழிலாளியிடம் பேசுவதுகூட சட்டப்படி தண்டவரி சுமத்தப்படத்தக்க குற்றம் ஆகும். வேலை செய்யும்போது மகிழ்ச்சி தோன்றச் சீழ்க்கையடிப்பதுகூட முதலாளிக்குப் பிடிக்கா விட்டால் அதேவகைக் குற்றமாய் விடலாம். காலையில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் அடிக்கும் மணியோசை அவன் வாயில் கடந்து உட்செல்ல வேண்டும் என்றும் இயந்திரங்கள் வேலை செய்ய வேண்டுமென்றும் எச்சரிக்கை செய்யும் ஓசை ஆகும். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி ஓசையோ சங்கு ஓசையோ அவனை வெளிச் சென்று உணவுகொள்ள அனுமதியளிக்கிறது. தான் ஓட்டும் இயந்திரமும் அவனுக்கு உரியதன்று, அவன் கூலிக்கு அல்லது வாடகைக்கு வாங்கப்பட்ட ஒரு சரக்கு; யார் வாங்குவார்களோ என்று ஏங்கி, வாங்க ஆள் கிடைத்தபோது மகிழவேண்டிய நிலையிலுள்ளவன் அவன்”