உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 44

'நம் தர்ம கைங்கரியங்கள்' இப்பழிகளைக் குறைக்க முற்படுவது உண்மையே. ஆனால், இது பெரும் பழி செய்து அதனுடனே நுண்ணிய சிறு திருத்தங்களையும் உடன் செய்வது போன்றதுமட்டுமே. சமூகம் இன்று மனமாரத் தன் மக்களைப் பட்டினியாக்க முயலவில்லை என்பது உண்மையே. பஞ்சமும் வறுமையும் தாண்டவமாடும்போது தக்க உதவிகள் செய்ய முயற்சிகள் எடுக்கப்படவே செய்கின்றன. இதற்காகப் பெரும் பொருட் செலவில் பல அமைப்புகள் நிறுவப்பட்டு பல மக்கட் பணியாளர் தம் உழைப்பையும் ஊக்கத்தையும் அவற்றிலீடு படுத்துகின்றனர். ஆயினும், தர்ம சிந்தனையின் பலன் பல இடங்களில் துன்பத்தை இன்னும் பெருக்கவே செய்கிறது. “அது அஞ்சி அஞ்சி இரக்கும் அடிமை மனப்பான்மையையே தொழிலாளியிடம் வளர்க்கிறது. அவன் குடும்ப மதிப்பைக் குறைத்துத் தன் மதிப்பை அழித்து விடுகிறது. தர்ம சிந்தனையாகிய போர்வையின்கீழ் வஞ்சகர் அவன் குடும்ப நிலைமைகளைத் துருவியறிந்து அவனைப் பாழ்படுத்த வகை செய்துவிடுகிறது.”

உழைக்கும் வகுப்பின் துயர்களைத் தணிக்கவேனும் எத்தனையோ வகை முயற்சிகள் செய்யப்படுகின்றனவே என்று முதலாளிகள் கேட்பர். தொழிலாளர் நலன்களுக்கான சட்டப் பாதுகாப்புகளை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், இவை துன்பங்களைக் குறைக்கப் பாடுபடுகின்றனவேயன்றித் துன்பத்தின் காரணங்களையறிந்து நீங்கும் நோக்கம் உடையவை யல்ல. துன்பம் அபாயகரமான அளவுக்கு அதிகப்பட்டுவிடாமல் காக்கவே அவை பயன்படுகின்றன. முதலாளித்துவம் எவ்வளவு காலம் நீடிக்குமோ, தொழிலாளர் கூலியானது தேவை - தருவிப்பு ஒழுங்குப்படி எவ்வளவு காலம் வரை அறுதியிடப்படுமோ, அவ்வளவு நாளும் வறுமை ஒழியாது, பெருகவே செய்யும்.

இங்ஙனம் எந்தக்கூறினை எடுத்துக்கொண்டாலும், முதலாளித்துவம் எத்தனையோ குறைபாடுகளும், குற்றங்களும் உடையதாயிருக்கிறது.

ஆகவேதான், முதலாளித்துவம் சமூக அமைப்பில் ஏற்பட்ட ஒரு நோய் என்றும் தற்கால நாகரிகத்தின் ஒரு சாபக்கேடு என்றும் உண்மையிலேயே ஒழிக்கப்பட வேண்டிய ஒரு தீமை என்றும் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது.