உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. கனவுக் காதல்

கில்லியட் செயல் வீரன்; ஆனால், வாய் பேசாதவன். அவன் உள்ளத்தின் காதலும் ஊமைக் காதலாகவே உள்ளுர முதிர்ந்து வந்தது. ஆனால், மற்ற செயல்களை வாய் பேசாமல் நிறைவேற்றி விடலாம். வாய் பேசாமலே கனவுலக எண்ணங்களை நனவுலகச் செயல்களாக்குபவர் உண்டு. கில்லியட் அத்தகையவன். அவன் ஒரு கனவாளன். ஆனால், காதல் கனவு நாகரிக சமூகத்தில் பேச்சு மூச்சின்றி எங்ஙனம் நனவாகும்?

அவன் அடிக்கடி அவளைச் சந்திக்க விரும்பினான் ஆனால், அவன் நாடியது, தான் அவளைக் காணவேயன்றி அவள் தன்னைக் காண்பதன்று. அவள் கால் பதிந்த இடத்தை அவன் கண்களில் ஒத்திக்கொண்டான். அவள் சென்ற திக்கை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு மிங்கும் நின்று அவள் வீட்டு வாயிலை, சாளரங்களை அவன் உற்றுக் கவனித் தான். பல மணி நேர முயற்சியின்பின் அவள் தலையணியின் தும்பு தெரிந்தால், பின்தானை அருகு தெரிந்தால், அவன் முயற்சிக்கு நிறைவு ஏற்பட்டு விடும். மறுதடவை காண அவன் நாள் கணக்கானாலும் பொறுத்திருப்பான். ஆனால், காட்சியை அடுத்துச் சந்திப்பு, சந்திப்பை அடுத்துப் பழக்கம், பழக்கத்தை யடுத்து நட்பு என்ற படிகள் அவனுக்கு எட்டாப் புதிய அனுபவங்களாயிருந்தன.

அவன் வீட்டுத் தோட்டமும் அவள் வீட்டுத் தோட்டமும் அடுத்தடுத்தே இருந்தன. இடையே கொடி படர்ந்த ஒரு இரும்பு முள்வேலிதான் இருந்தது. வேலியின் இப்புறமிருந்த குத்துக் கல்லில் அவன் சென்று கல்லுடன் கல்லாய்க் காத்திருப்பான். மாலையில் அவள் உலவும்போது அவள் ஆடையின் சலசலப்பு அவன் உள்ளத்துக்குத் துடிப்பூட்டும், நிலவில் அவள் நிழலுருக் கண்டு அவன் மெய் மறந்திருப்பான்.