190
அப்பாத்துரையம் - 45
மனத்தில் கனிவும் இரக்கமும் ஏற்பட்டு, அவளும் நம் உள்ளத்தில் மனித உணர்ச்சிகளைத் தூண்டுகிறாள்.டெனிஸன் பாடல்களில் முன்னும் பின்னும் கலைஞன் படைப்பு என்ற முறையில் இதனுக்கு ஈடான பாடல் கிடையாது என்னலாம். மேலும் இது பிற்காலத்தில் டெனிஸன் பல்லாண்டுகள் தொடர்ந்து எழுதிய ஆர்தர் கதைத்தொடரின் ஒரு பகுதியைச் சித்திரிப்பது மாகும். ஆர்தர் கதையின் பல பகுதிகளையும் டெனிஸன் விரிவாக எழுதிய போதிலும் சொல்லழகிலும் கலை நிறைவிலும் மருட்சியிலும் இதனை அவர் என்றும் அணுகியதில்லை என்றே பலரும் கொள்கின்றனர்.
டெனிஸனின் 1832ஆம் ஆண்டுப் பாடல்களில் இன்னொரு சிறந்த புனைவு, ‘ஆலைக்காரன் புதல்வி' என்பதாகும். மேரியானாவைப்போலவே இதிலும் இயற்கைச் சூழலுடன் மக்களது உள்ள உணர்ச்சியும் கலை ஓவியத்தில் முற்றிலும் இணைந்து விளங்குகின்றது. இக்காரணத்தால் அறிவாராய்ச்சி மிக்க அறிஞர் முதல் சின்னஞ் சிறுவர் வரை அது கவரும் தன்மையுடையதாய் அமைந்துள்ளது.
‘கேட்குதியோ ஐய உளம் உலைவற்று நின்றிடினும்’
'முன்னை நாளினில் விடுதலைச் செல்வி மாமலைக்கண்’
என்று தொடங்கும் சிறுபாக்கள் இரண்டும் இக்கவிதையங் கோவையின் ஒப்பற்ற இரு முத்துக்களாகும்.
கலைப்புனைவு வகையில் 1832இல் டெனிஸன் கவிதைகள் உச்ச நிலையை யடைந்தன எனலாம். உண்மையில் கால மாறுதலால் மாறுபடாத நிலையான புகழுடைய டெனிஸன் கவிதைகள் 1832க்கும் 1842க்கும் இடையில் எழுதப்பட்டவையே யாகும். அதற்குப் பின்னும் அவர் பாடல்களிடையே நறுஞ் சுனைகளும் மலர்ப்பூந்தடங்களும் நிறைந்துள்ளனவாயினும் முதற்காலச் சிறுபாக்களில் காணப்பட்ட நிறையழகு அவற்றி லில்லை. கருத்திலும் முதற்காலக் கவிதைகள் பொது வாழ்க்கையில் நுழையாமல் புனைவு வாழ்க்கையிலேயே நின்றிருந்தன. ஆதலால், எல்லாக்காலத்திலும் இவை ஒரே நிலையான புகழ் பெற்றன.