உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 167


மைசூர்த் தனியரசு ஹைதர் நேரடியாக ஆண்ட பகுதியே. அவன் பேரரசாட்சியின் விரிவு மேற்குறிப்பிட்ட பெருங் கொங்குநாடு முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அத்துடன் பல சமயங்களில் அது அவ்வெல்லை கடந்து மலபார் மாவட்டம், கொச்சித் தனியரசு, சோழநாடு, தொண்டைநாடு, ஹைதரா பாதின் பகுதி ஆகிய எல்லைகளிலும் பரவியிருந்தது.

தென்னாட்டில் எங்கும் முடியரசுகள் தோன்றுவதற்கு முன் குடியரசுகளும் குடிமன்னர் ஆட்சிகளுமே பரவியிருந்தன என்று எண்ண இடமுண்டு. சங்ககாலத்தில் தமிழகத்திலே சேர சோழ பாண்டியர் என்ற முத்தமிழ் முடிமன்னர் ஆண்டனர். ஆனால், தமிழகம் நீங்கலாக எப்பகுதியிலும் அந்நாளில் மொழி எல்லை வகுப்போ, மொழி சார்ந்த அரசுகளோ ஏற்படவில்லை. குடி மரபுகளே நிலவின. தமிழகத்திலேகூட. முடியரசுகள் ஏற்பட்ட பின்பும், அவர்களுக்கு அடங்கியும் அடங்காமலும் பல குடிமரபுகள் நிலவின. தமிழகத்துக்கு அப்பால் முடியரசுகள் இல்லை; குடியரசுகளே நிலவின. தமிழகத்திலும், தமிழகத்துக்கு அப்பாலும் இக்குடி மன்னர்கள் வேளிர் அல்லது சாளுக்கர்கள் எனப்பட்டனர்.

வடதொண்டை நாட்டில் இன்றையத் தெலுங்கு நாட்டுப் பகுதியில் ஆய் அண்டிரனும் திரையரும் வேளிராக ஆண்டனர். அண்டிரர் குடியே ஆந்திர மரபாய் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை பேரரசாக நிலவிற்று. கலிங்கரும் இத்தகைய குடியரசரே. சிலகாலம் கலிங்கரும் சிலகாலம் ஆந்திரருமாக இமயமுதல் வடபெண்ணைவரை பேரரசாட்சி நடத்தினர். சங்ககாலத் திரையர் குடி மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் பல்லவப் பேரரசு நிறுவி, இன்றைய ஆந்திர, வடதமிழகப் பகுதி முழுதும் ஆண்டது. இதேசமயம் மேல்திசையில் கடம்பர் குடியரசு மரபினராக ஆண்டனர். கலிங்கர், ஆந்திரர், பல்லவர் அல்லது திரையர், கடம்பர் ஆகிய இவ்வெல்லா மரபுகளும் கடலோடிகளாக விளங்கி, கடல் வாணிகம் நடத்தினர். அயல் நாடுகளில், சிறப்பாகத் தென்கிழக்காசியாவெங்கும் இவர்கள் தென்னக நாகரிகம் பரப்பி, தென்னகக் குடியேற்றங்கள் நிறுவினர்.