பக்கம்:அமிர்தம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

நாம் இருக்கும் நாடு நமதே; சந்தேகமில்லை. ஆனால் நம் நாட்டிலுள்ள பொருள்களனைத்தும் தெரு விளக்கைப் போல, குடி தண்ணீரைப் போல நமக்குச் சொந்தமானவை யல்ல. அவை விற்பவர்களுக்குச் சொந்தமானவை; வாங்குபவர்களுக்குச் சொந்தமானவை. இந்த இரு திறத்தாரும் காட்டில் இருந்துகொண்டு, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகிறார்கள். அதன் காரணமாக, உழைப்பின் மதிப்பு குறைகிறது; முதலில் மதிப்பு ஏறுகிறது. நடுவில் மக்கள் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். வாழ்க்கையின் பல கொடுமைகளுக்கு இதுவே காரணம்.

இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகும் மக்களில் பெரும்பாலோர் ஏழைகள்; போதுமான எழுத்தறிவு இல்லாதவர்கள்; இலக்கியமோ, இலக்கணமோ தெரியாதவர்கள். இவர்களில் சிலர் மேற்படி அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும் ஆளாகி, இயல்பாகவே அறிவு பெறுகிறார்கள்; எத்தனையோ நாட்களாக உணராமலிருந்த தங்களுடைய சக்தியையும் ஒரளவு உணருகிறார்கள். இந்த நிலைக்கு வந்த பிறகு அவர்களுடைய உள்ளங்கள் கொந்தளிக்கின்றன; குமுறுகின்றன. அந்தக் குமுறலின் காரணமாக எண்ணங்கள் சிறகடித்துப் பறந்து அவர்களை எழுதத் தூண்டுகின்றன; எழுதுகிறார்கள். அவ்வாறு எழுதுபவர்கள் பிறர் பாராட்டுவதைப்பற்றியும் கவலைப்படுவது கிடையாது; துாற்றுவதைப் பற்றியும் கவலைப்படுவது கிடையாது.

இம்மாதிரி எழுதப்படும் கதைகள் இயற்கைப் பிரசவத்தைப் போன்றதாகும்.

இன்னொரு சாரார், இளமையில் எந்தவிதமான கொடுமைக்கும் ஆளாகாமல் தப்பி முறையாகப் படிக்கிறார்கள்; படித்துப் பட்டமும் பெறுகிறார்கள்; இதன் காரணமாக, அவர்களால் எதையும் இலக்கியக் கண்ணோடு பார்க்க முடிகிறது ; இலக்கணக் கண்ணோடு எழுத முடிகிறது. இவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/5&oldid=1322925" இலிருந்து மீள்விக்கப்பட்டது