பக்கம்:அமிர்தம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கால மலரில் வருஷ இதழ்கள் சில உதிர்ந்தன. அதற்குள் எவ்வளவு மாறுதல் லதாவும் அடியோடு மாறிவிட்டாள். முன்போல அடிக்கடி பேசாமல் அவள் எங்கேனும் பதுங்கிவிடுவாள்.

அறியாப் பருவம் நீங்கி அறியும் பருவம் அடைந்து விட்டாள் என்ற எண்ணம் போலும் அவளுக்கு. வலியப் போய் பேச முயன்றாலும், அப்படியே குபீரென்று சிவந்து விடும் அவளது கதுப்புக் கன்னங்கள்.

வாழ்க்கையை நடத்த வருவாயை எதிர்நோக்கி பர்மாவிற்கு கடல் கடந்து சென்றனர் லதாவின் பெற்றோர்கள். உடன் சென்ற லதாவை வழியனுப்பினேன். அரைக் கணமும் அவளது பிரிவைச் சகிக்க முடியாத நான் அவள் திரும்பும்வரை எப்படிப் பொறுப்பேன் என்ற நினைவு என் உள்ளத்தை உருக்கியது. பிரிவின் வேதனை பொல்லாத தாயிற்றே!

நிர்மலமாயிருந்த என் மனத்திரையில், எங்களது முதல் சந்திப்பின் செய்தியை தன் வாழ்க்கைச் சுருளில் புகுத்திக் காட்ட ஆரம்பித்தாள் சுஜாதா.

சுஜாதா ஒரு ஆரம்ப பாடசாலையின் ஆசிரியை. அப்போதுதான் எங்கிருந்தோ மாற்றலாகி வந்திருந்தாள். வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாயுள்ள இக்காலத்தில் நான் வாடகைக்கிருந்த ‘பிளர்க்’கில் கடைசி அறையை வாடகைக்கு அமர்த்திக்கொண்டாள் சுஜாதா.

அன்று இரவு நடுநிசி.

ஆழ்ந்த நித்திரையிலிருந்த நான் திடீரென்று அழுகுரல் கேட்டுத் திடுக்கிட்டேன். அழுகை சப்தம் வரவர உச்சஸ்தாயியில் வந்தது. சப்தம் மிதந்து வந்த திசையைக் கவனித்தேன் கண்களைத் துடைத்துக்கொண்டு. சுஜாதா வின் அறையில்தான். அழுகுரல் கேட்டது. விரைந்து சென்றேன்.

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/60&oldid=1313462" இலிருந்து மீள்விக்கப்பட்டது