பக்கம்:அமிர்தம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“அப்படியென்ன அதுக்குள்ளே ஒனக்கு உசிரு மேலே அம்பிட்டு வெறுப்பும் சங்கடமும் வந்திடுச்சு.”

“ஏளை அனாதை நான். அப்பனையும் ஆத்தாளையும் பறி கொடுத்துப்பிட்டுக் கடைசியா கடவுளை நம்பிக்கிட்டிருந்தேனுங்க. திக்கில்லாதவங்களுக்குத் தெய்வந்தானே தொணை. ஆனால் கடைசியிலே மாரியாத்தாவும் என்ன கைவிட்டுப்பிடுச்சுங்க. அப்புறம் இந்த எழைக்கு யாரு. கதி? எதோ ஒரு ரோசன ஓடுச்சு மனசிலே. ஆத்தா காவேரி கிட்டயாச்சும் அடைக்கலம் புகலாமின்னு நெனச்சேன். அப்பத்தான் நீங்க ஒடியாந்திருக்கீங்க. தெய்வம் போல இருந்திச்சு, ஒங்களைப் பார்த்ததும்.”

அவள் குரலில் சோகம் பின்னணியாய் அமைந்தது. கண்களில் நீர்மல்கிப் பெருகியது.

வாடியிருக்கும் புஷ்பங்கள் பனித்திவலே பட்ட மாத் திரத்தில் மலர்ந்து சோபிதமடைவதைப் போல, அவளது. குவிந்திருந்த முகமண்டலத்தில் மலர்ச்சியின் ரேகைகள் நெளிந்து காணப்பட்டன. அதிர்ந்திருந்த அவன் உள்ளத்திற்கு அபயமளிப்பது போன்றிருந்தது அக்காட்சி.

“இந்தாப் பாரு. அன்னிக்கு ஒன்னைக் கண்டதிலே இருந்து என் மனசு எங்கிட்டே நிக்கலை. சதா ஒன் நினைவு தான். மாரியாத்தா ஒன்னை மறக்கவேயில்லை. இல்லாட்டி, நான் இந்த சமயத்துக்குக் கணக்காக எப்புடி இங்கே வன்திருக்கமுடியும், நம்ப ரெண்டு பேரையும் ஜோடி சேர்க்கத்தான் இது நடந்திருக்குது. நீ என்னோடே வந்திடு. ஒன் மனசு கோணாம் எல்லாம் செய்யிறேன். ரெண்டுபேருமா எங்கினாச்சும் அக்களைச் சீமைக்குப் போயி வயிறு கழுவிக்கலாம். வரவர இத்தக் கம்பங் கூத்தாடிப் பிழைப்பும் புளிச்சுப் போச்சு, நானு ஒண்டிக்கை மனுசன். என்னதான் செய்யமுடியும் யோசிக்கச் சொல்லு.”

68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/70&oldid=1313532" இலிருந்து மீள்விக்கப்பட்டது