10
அமுதவல்லி
எனக்குத் தூக்க மயக்கம். மயக்கம் கலைந்த தருணத்தில், மாயவரம் நெருங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். என் உணர்வு ஆட்சி செலுத்திய போது, என் விழிகள் அந்தப் பெட்டியைச் சுற்றி அலைந்தன. ஒரே ஒரு தந்தப் பேழையைத் தவிர, வேறு எதையும், யாரையும் நான் காணவில்லை!
கதை எழுதும் பைத்தியக்காரன் நான் என்று யாரோ ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்!
பெட்டியைத் திறந்தேன்.
நெடுங்கதை ஒன்று கிடைக்கப் பெற்றேன்!
இன்பமும் துன்பமும் கலந்த நினைவில், பதட்டமும் கலக்கமும் இணைந்த நிலையில், கனவும் லட்சியமும் பின்னிய பக்குவப் போக்கில் நான் என்னையே மறந்தேன்.
கசங்கிய மலரென்றால், அதற்கு மணம் கிடையாதா? மணம் இருக்கக் கூடாதா?
பூவின் நிறைவு அதன் சிரிப்பில், கண்ணீரில் குறிக்கோளில் இருப்பதாக யாரோ பாடியிருப்பது நினைவில் எழுந்தது.
என் கண்கள் கக்கிய துளிகள் ஒவ்வொன்றின்றும் ஒவ்வோர் அத்தியாயம் புறப்படத் தலைப்பட்டது.
மாப்பிள்ளை வேட்டை!
இயற்கையின் நிலா விருந்தை உலகம் சுவைத்து அனுபவித்துக் கொண்டிருந்த வேளை அது!