பக்கம்:அமுதும் தேனும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

கவிஞர் சுரதா


வாய்ச்சீரும், முத்துப்பல் வரிசைச் சீரும்,
வளைந்தநிலாப் பிறைபோன்ற நெற்றிச் சீரும்
தாய்ச்சீரும், குடும்பநலச் சீரும் கொண்ட
தையலவள் அன்னவனைக் கூர்ந்து நோக்கக்
காய்ச்சீரில் பெயரமைந்த சட்டநாதன்
காரிகையைப் பார்த்தபடி "பருவப் பெண்ணே!
பாய்ச்சீரில் படுக்கைச்சீர் பிரிப்போம் என்றான்.
"பண்டிதரின் வேலையெதற் கிப்போ” தென்றாள்.

ஏழையடி ஏழைகளாய் வறுமைக் கோட்டில்
இருந்தவர்க்கும், பாவலர்க்கும் நாவ லர்க்கும்,
பேழையடிப் பேழைதனில் சேர்த்து வைத்த
பெருநிதியை வழங்கிவந்தோன் அவளை நோக்கித்
"தாழையடித் தாழையென ஒதுக்கி என்னைத்
தள்ளாதே பெண்மயிலே” என்று ரைத்தான்.
வாழையடி வாழையென வந்த மங்கை
வட்டத்திற் குள்ளடங்கும் சதுர மானாள்.

“தேரழுந்தூர் தனிற்பிறந்த பெண்ணே! இங்கே
திரும்பிப்பார்” என்றவுடன் திரும்பிப் பார்த்தாள்.
நேரசையும் நேரசையும் தேமா வாகும்;
நிறைநிலவே! உன்கன்னம் தேமா வாகும்.
ஓரவிழி பாய்ச்சுகின்ற பருவ காலம்
உறவுக்கும் இரவுக்கும் இனிமை சேர்க்கும்.
நீரருவி போன்றவளே! நிழலே! என்றான்.
நெய்கனிந்த கருங்குழலி நாணம் கொண்டாள்.