உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

26




அதுவாக வருவதுதான் அதிர்ஷ்டம் என்பர்
அதிலெனக்கு நம்பிக்கை சிறிது மில்லை.
எல்லோர்க்கும் செல்வம் வேண்டும்.
புகழ்வேண்டும்! புகழொன்றே நிலைக்கு மென்றாள்.
மதிப்புள்ள பாராட்டும், புகழும், பேரும்,
மக்கள்வெளிப் படுத்துகின்ற வாய்க்காற் றாகும்.
எதற்கிந்தப் பாராட்டும், புகழும், பேரும்,
எனக்கிவற்றில் நம்பிக்கை இல்லை என்றான்.

சிகை நீண்ட வேதாந்தி அவளை நோக்கிச்
சீர்சிறப்போ டரசாண்ட நமது மன்னர்
பகைநீண்ட நேரத்தில் படையெடுத்தும்,
பசிநீண்ட நேரத்தில் உணவளித்தும்,
தொகைநீண்ட நேரத்தில் பரிசளித்தும்,
துயர்துடைத்தார் என்றுரைத்தான் அதனைக் கேட்டு,
மிகநீண்ட மூக்கமைந்த விதவைப் பெண்ணாம்
மீனாட்சி பெருமூச்சு மட்டும் விட்டாள்.

வாயிலிட்டால் இனிக்கின்ற தேனும் பாலும்
வயிற்றுக்குச் சென்றவுடன் புளிக்கும் என்றான்.
தூயதமிழ் அவ்வாறு புளிப்பதுண்டோ
சொல்லுங்கள் எனக் கேட்டாள் அந்த மங்கை.
ஆயகலை அறுபத்து நான்கும் கற்றோன்
அடங்காத புகழ்பெற்றோன் அவளை நோக்கிக்
காயகற்பம் போன்றதமிழ் கற்றோர், எட்டிக்
காயதனைத் தின்றாலும் இனிக்கும் என்றான்.