உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

28



எங்கிருந்தோ வருகிறது தென்றல் என்றாள்.
என்னைத்தான் சுடுகிறது திங்கள் என்றாள்.
தங்களையேன் சுடவேண்டும் என்று கேட்டான்.
தனித்திருந்தால் சுடத்தானே செய்யும் என்றாள்.
செங்கரும்பு தித்திக்கும் எனத்தெ ரிந்தும்
சிலரதனை விரும்புவதே இல்லை என்றாள்.
தங்கமலர்த் தாமரையில் தேனி ருந்தும்
தவளையதை உண்ணுதற்கு விரும்பா தென்றான்.

கவிஞானச் சுடர்விளக்கின் ஒளியாம் அன்னோன்
கரத்திலொரு சாத்திரநூல் இருத்தல் கண்டு,
சுவைஞானச் சுவடிகளைப் பயின்று காதல்
தூதுவிடும் இவ்விளமைப் பருவம் தன்னில்
சிவஞான போதத்தின் வழிநூ லான
சிவஞான சித்தியார் தேவைதானா?
புவிஞானம் பெறத்தக்க நூலா இந்நூல்?
பூவிருக்கும் போதுபுல்லை எடுக்க லாமோ?

முப்பாலில் முதற்பாலாம் அறத்துப் பாலை
முன்பொருநாள் தெலுங்கில் மொழிபெயர்த்துத் தந்தீர்
அப்பால்நான் பொருட்பாலை விரும்பிக் கேட்டேன்
அதனையும்நீர் களிதெலுங்கில் வடித்துத் தந்தீர்.
இப்போது காமத்துப் பாலை நாமிங்
கிருவருமே மொழிபெயர்ப்போம் என்று ரைத்தாள்.
கைப்பான துவர்ப்பான கார மான
கரிப்பான மொழிகேட்டுத் திகைக்க லானான்.