உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

கவிஞர் சுரதா



விருத்தியுரை சொல்லுமென்றன் விழியிலுள்ள
விண்ணப்பம் படியுங்கள்; இயற்கை நன்கு
சுருக்கிவைத்த சிற்றிடையைத் தொட்டுத் தொட்டுச்
சுற்றளவு பாருங்கள்! சுகந்தா ருங்கள்.
நெருக்கிவைத்து நிறம்வைத்து நெளிய வைத்து
நீட்டிவைத்துக் கூட்டிவைத்த கூந்தல் மீது
பொருத்தமுள்ள மலரெதுவோ அதனைச் சூட்டிப்
போராடும் கீழ்க்கடலில் நீரா டுங்கள்.

ஒருகொடியில் நான்குவகைக் கனிகள் இந்த
உலகத்தில் எங்குமில்லை எனினும் என்றன்
அருகினிலே வாருங்கள்; அழகு தூங்கும்
அதரத்தில் செங்கோவைக் கனிபா ருங்கள்
குருத்துப்பல் வரிசையில்மா துளைபா ருங்கள்
குதிகாலில் நல்லத்திப் பழம்பா ருங்கள்
நிருவாண மாக்குங்கள் என்றன் மார்பில்
நிச்சயமாய் இருவில்வப் பழங்கி டைக்கும்.

தீராத பசிக்காக நாமெல் லோரும்
தினந்தோறும் உண்ணுகின்றோம் அன்றோ? வாழ்வில்
பேராசை கொள்ளுமிந்தப் பருவம் தன்னில்
பேசாமல் இருந்திடவா முடியும்? நான்போய்ச்
சேராத இடந்தனிலே சேர்ந்தா லன்றோ
தீதுவரும்? எனக்கும்மால் வரமா? ஆற்றின்
நீரோடு நீர்கலக்க வேண்டு மென்று
நினைப்பதிலே தவறென்ன? குற்றமென்ன?