35
கவிஞர் சுரதா
கொட்டைகட்டும் சைவத்தை நம்பிக் கொண்டு
கோதையரின் இன்பத்தைக் குறைகூ றாதீர்.
கொட்டாவிக் கொருநாளும் பெருமை யில்லை
கொஞ்சாத வாழ்வுக்கும் பெருமை இல்லை.
வெட்டத்தான் பட்டாளக் கத்தி; செந்நெல்
விதைக்கத்தான் வரப்புயர்ந்த வயல்கள்; மாந்தர்
கட்டத்தான் பட்டாடை கரும்பும் தேனும்
கற்கண்டும் கனிவகையும் தின்னத் தானே?
பரபக்கம் சுபக்கமென்று பேசிக் கொண்டே
பருவத்தைப் பாழாக்கி வருகின்றீர்கள்.
இருபக்கம் இறகுடைய பறவை வானில்
எப்பக்கம் பறந்திட்டால் என்ன? தங்கள்
குருபக்கம் திருமூலர் இருந்தார். இந்தக்
கோதையுங்கள் பக்கத்தில் இருந்தால் என்ன?
ஒருபக்கம் நமக்கேற்ற மஞ்சம்; தாங்கள்
ஒத்துழைத்தால் இன்பத்திற் கேது பஞ்சம்?
ஒட்டடையான் எனும்நெல்லின் பெயரை மாற்றி
உங்கள்பெயர் அதற்கிடுவேன். எனது காலப்
பெட்டகத்தில் உங்கள்வர லாற்றைப் சேர்க்கப்
பெரிதும்நான் விரும்புகின்றேன். யோக மென்னும்
நிட்டையிலே காணாத சுகத்தை, இன்ப
நித்திரையில் கண்டிடலாம். மேலும் உங்கள்
கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன். என்னைக்
கட்டியணைத் தாலதுவே எனக்குப் போதும்.