அமுதும் தேனும்
38
கொஞ்சுதற்கும் காதலர்கள் கூடு தற்கும்
குறிஞ்சிநிலம் உரியதென்பர். சோழன் ஆண்ட
தஞ்சையில்தான் மலையில்லை என்றால், இந்தத்
தலைநகராம் திருச்சியிலே மலையா இல்லை.
மஞ்சத்தில் முகவுரையை தொடங்கி ஈங்கோய்
மலைமறைவில் முடிவுரையை முடிப்போம் என்றாள்.
அஞ்செழுத்து மந்திரத்தை உச்சரிப்போன்
ஆரணங்காம் அன்னவளை உற்று நோக்கிச்
சூதெல்லாம் உன்னுடைய சொந்த மென்றும்,
சுயநலமே உன்னுடைய நோக்க மென்றும்,
ஈதெல்லாம் உனதுசதித் திட்ட மென்றும்
இப்போது புரிந்துகொண்டேன். என்னைக் காணும்
போதெல்லாம் சிரித்தாயே இதற்குத் தானா?
போகமெனும் தாகவிடாய் தீர்க்கத் தானா?
காதெல்லாம் சுடுகின்றதுன் வார்த்தை உன்னைக்
கற்பரசி என்றன்றோ நினைத்தி ருந்தேன்.
பூனைக்கும் மானமுண்டாம் பறந்து சென்று
பூநக்கும் வண்டுக்கும் மான முண்டாம்!
மானுக்கும் மானமுண்டாம் உனக்கோ, அந்த
மான்பார்வை உண்டன்றி மான மில்லை.
வானத்து வெண்ணிலவு களங்கத் தோடு
வாழ்வதுபோல் பெண்ணொருத்தி வாழலாமா?
ஆனந்தக் களிப்பென்னும் பாடல் பாடும்
ஆரணங்கே கற்பென்னும் திண்மை எங்கே?