உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

கவிஞர் சுரதா



அங்குமிங்கும் பார்க்காமல் அவளைப் பார்த்தான்
ஆரணங்கும் அவ்வாறே அவனைப் பார்த்தாள்
மங்கையவள் கண்ணுக்குள் அவனி ருந்தான்.
வாலிபனின் கண்ணுக்குள் அவளிருந்தாள்.
இங்கிருந்தால் பிறர்காண நேரு மென்றாள்.
இருட்டுக்குள் நாமிருந்தால் தெரியா தென்றான்.
அங்கிருப்பேன் வாருங்கள் நாளை என்றாள்.
அவன் சென்றான். அதற்குப்பின் அவளும் சென்றாள்.

அரசனுக்கே அவள்சொந்தம். அவளை மற்றோர்
ஆண்பிள்ளை பார்ப்பதுவும் குற்ற மாகும்.
தரிசனமே குற்றமெனில், அவர்கள் ஆங்கே
சந்தித்து வருவதனை வேந்தன் பார்த்தால்
இருவருக்கும் மரணந்தான் அடுத்த கட்டம்.
என்றாலும் சந்திப்பர். அவனுக் கென்றே
அரைத்துவைத்த சந்தனமங் கிருந்தும், அன்னோன்
அதைப்பூசிக் கொள்வதற்கே முடிவ தில்லை.

உப்பரிகை மீதிலவள் வந்து நின்றே
ஒற்றைநிலா முகங்காட்டிச் சிரிப்பாள். பெண்ணே!
இப்படிவா என்றழைப்பான். ஆசை அச்சம்
இரண்டுக்கும் நடுவிலவள் துடிப்பாள். நெஞ்சின்
வெப்பநிலை மேலோங்கிப் பெருமூச் சாக
வெளியிலது வரும்போதும் இன்பக் காதல்
தெப்பவிழா நடப்பதில்லை; எதனா லென்றால்
தேனுக்கும் உதட்டுக்கும் நீண்ட தூரம்.