உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

46



நாடாண்டு வருபவர்கள் ஒழுக்கங் கெட்டு

நள்ளிரவில் பெண்மோப்பம் பிடித்து வந்தால்,

ஆடாத நல்லரசும் ஆடிப் போகும்.

அவமதிப்பும் உண்டாகும். ஆசா பாசம்

கூடாதென் றுரைத்தும்நீ கேட்டி டாமல்

குளிர்காய்ந்து கொண்டிருந்தாய், காசுக் காக

ஓடோடி வந்திருக்கும் அவளி டத்தில்

ஒழுக்கத்தை நீயிப்போ தெதிர்பார்க் கின்றாய்.


ஏற்றபடி புன்சிரிப்பைக் காட்டி உன்னை

ஏமாற்றிக் கொண்டிருக்கும் அவளை, ஈரச்

சேற்றதனில் புதைத்திட்ட போதும் அந்தச்

சேற்றுக்கும் மாசுவரும். நமது நாட்டின்

மேற்கிலுள்ள கானகத்தில் அவளைக் கொன்றால்

விலங்குகளும் தவறாகக் கருதும்! ஒடும்

ஆற்றதனில் அன்னவளை மூழ்க டித்தால்

அச்செய்தி நாடெங்கும் பரவக் கூடும்.


நடித்துக் கொண் டிருக்கின்ற மாதர் தம்மை

நம்பிக்கொண் டிருக்கின்ற மன்னா! உன்னைக்

கெடுத்துக்கொண் டிருப்பவளாம் அவளும் நீயும்

கீற்றுநிலா வெளிச்சத்தில் ஒன்று சேர்ந்து

படுத்துக்கொண் டிருப்பதுபோல் பகைவர் இங்கே

படமெழுதி விற்றாலும் விற்கக் கூடும்!

குடித்துக்கொண் டிருப்பவர்கள் அதனை வாங்கிக்

குவலயத்தில் பலரிடத்தும் காட்டக் கூடும்.