பக்கம்:அமுதும் தேனும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

கவிஞர் சுரதா


ஆதலினால் நீயவளை ஆற்று நீரில்

அமிழ்த்துவது சரியன்று சிறிதா யுள்ள

மோதிரத்தை மிகப்பெரிய வளைய மாக்க

முயலாதே! நெருப்பிலெழும் புகையை வாயால்

ஊதுதற்கேன் நினைக்கின்றாய்? இப்போ துன்றன்

உணர்ச்சிகளை அடக்கிக்கொள் வேந்தே என்றான்.

வீதியுலா வருகின்ற மன்னன், அன்னோன்

விளக்கத்தை மறுக்காமல் ஏற்றுக் கொண்டான்.


பழுத்தெழுந்த செங்கதிரோன் மேற்கே சென்று

படுத்திருந்து மறுபடியும் கிழக்கே வந்து

விழித்தெழுந்த நேரத்தில் அமைச்ச ரோடு

வேந்தனவன் ஆசனத்தில் வீற்றி ருந்தான்.

இழுத்துவரப் பட்டவளாம் அவளை, முத்தம்

இடுதற்கு முயன்றானே இளைஞன், அன்னோன்

அழைத்துவரப் பட்டாங்கே நிறுத்தப் பட்டான்.

அன்னவனை அவ்வேந்தன் கூர்ந்து பார்த்தான்.


ஒருமூச்சை அறிஞர்களுக் கனுப்பி, மற்றும்

ஒருமூச்சை அமைச்சர்களுக் கனுப்பி, அன்னோன்

பெருமூச்சை, சிற்பியொடு தொடர்பு கொண்டு

பிழைபுரிந்து வந்தவளுக் கனுப்பி, அந்த

வருமூச்சை வானத்திற் கனுப்பி, அந்த

வாலிபனை மீண்டுமவன் உற்று நோக்கி;

அரைமூச்சு விடுபவனே! அவளும் நீயும்

அன்றாடம் பழகுவதாய்க் கேள்விப் பட்டேன்.