உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதும் தேனும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

கவிஞர் சுரதா




பஞ்செனவே நரைத்தவளை மன்னன் உற்றுப்

பார்த்தபடி "எதற்கு வந்தாய்?" என்று கேட்டான்.

நஞ்சுகொண்ட நெஞ்சத்தாள் அவனை நோக்கி

நானுன்றன் துயர்துடைக்க வந்தேன். அந்தப்

பஞ்சவர்ணக் கிளிபறந்து போமோ என்று

பார்த்திபனே கலங்காதே இன்றே சென்று

வஞ்சகத்தால் நானவனை மடியச் செய்து

வருகின்றேன் பாரென்று கூறிச் சென்றாள்.


விரைவாகச் சிற்பியிடம் வந்தாள், வந்து

வெற்றிபல பெற்றவனாம் அவனை நோக்கிக்

கரும்பாம்பு தீண்டியதால் அந்த மங்கை

கர்ப்பூரம் அணைவதுபோல் அணைந்து விட்டாள்.

ஒருவாரம் ஆயிற்றே அப்பா உன்னை

உயிர்க்குயிராய் நேசித்த மங்கை மாண்டு!

தெரியாதா உனக்கிந்தச் செய்தி என்று

சிற்பியிடம் பொய்யுரைத்துப் புலம்ப வைத்தாள்.


"பலர்புகழும் பாரசிக ரதியே! காதற்

பதிகத்தின் முதற்பாட்டே! இந்த நாட்டில்,

தலைசிறந்த புகழ்பெற்று விளங்கும் என்னைத்

தவிக்கவிட்டு நீமட்டும் சென்றிட் டாயே!

மலைமடியல் நானிங்கே இருக்க, நீபோய்

மரணத்தின் மடியதனில் வீழ்ந்திட்டாயே!

இலையினிமேல் எனக்கிங்கு வாழ்க்கை;கண்ணே!

ஏதென்றன் தோட்டத்தில் மரங்கள் பூக்கள்!