அமுதும் தேனும்
58
கதைமட்டும் சொல்லாமல் பார சீகக்
கவிதைகளும் சொல்பவளே! காதல் மாதே!
எதுவட்டம்? எதுசதுரம்? எதுமுக் கோணம்?
இதற்குவிடை கூறுகநீ இப்போ தென்றான்.
மதிவட்ட முகமுடையாள் அவனை நோக்கி,
வான்வட்டம், நிலம்சதுரம், தீமுக் கோணம்,
சதைவட்டம் என்வதன வட்டம்; அந்திச்
சந்திரன்வந் தென்முகத்தில் ஒட்டு மென்றாள்.
ஆடலுண்டு நாள்தோறும் அங்கே; வெய்யில்
அடங்கியபின் வருகின்றோம் இங்கே என்றான்.
கூடலுண்டு நமக்கிங்கே ஊட லுண்டு;
கூட்டலுண்டு; கழித்தல்மட்டும் இல்லை என்றாள்.
மூடலுண்டு திறத்தலுண்டு முத்த முண்டு;
முத்தத்தில் எட்டுவகைச் சத்தமுண்டு;
பாடலுண்டு நள்ளிரவில் கைப்பந் தாட்டப்
பயிற்சியிங்கே நடப்பதுண்டு பெண்ணே என்றான்.
மாலையில்நான் இரண்டுமுறை குளித்தேன் என்றாள்.
மறுபடியும் நீகுளிக்க நேரும் என்றான்.
காலையில்நான் குளிக்கும்போ தெல்லாம், அண்டங்
காக்கைகளும் தவறாது குளிக்கும் என்றாள்.
நீலமயில் போன்றவளே! இப்போ திந்த
நிகழ்ச்சிநிரல் முடிவுற்ற பின்னர் சென்று.
பாலதனில் குளித்திடுக என்றான். உங்கள்
பார்வையெனும் குளத்தில்தான் குளிப்பேன் என்றாள்.