பக்கம்:அமுதும் தேனும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

62


ஆதலினால் வாய்திறவா திருப்பீர் என்றன்
ஆருயிரே! என வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.
கோதையவள் வருங்கால வாழ்வை எண்ணிக்
கொப்பரையில் அகப்பட்டோன் ஊமையானான்,
வேதனையில் வெந்தவளோ, அடுப்பில் வைத்த
விறகுக்குத் தீயிட்டாள்; கண்ணீர் விட்டாள்.
சோதனையில் சிக்கியவன், மங்கை சொன்ன
சொற்காத்தான், வெந்நீரில் வெந்து செத்தான்.

கலைவளர்க்க ஒருகாலம்; என்றன் வாழ்வில்
காதலிக்க ஒருகாலம்; கண்ணீர் விட்டுப்
புலம்புதற்கும் ஒருகாலம்! இனிமேல் ஏது
பொற்காலம்? புதுவாழ்வு பொங்கும் காலம்?
இலையெனக்கு நற்காலம்; இனிமேல் என்றன்
எதிர்காலம் உதிர்காலம் என்று கூறிக்
குலைவாழை காற்றினிலே சாய்தல் போலக்
கொப்பரையின் மீதினிலே கோதை சாய்ந்தாள்!