பக்கம்:அமுதும் தேனும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

கவிஞர் சுரதா


முதன்முதலில் ருகய்யாவை மணந்து கொண்ட
முகலாயச் சக்ரவர்த்தி அக்பர்; மற்றோர்
புதுமதியாம் ஸ்லீமாவை மணந்து கொண்டார்.
புகழ்பெற்ற ரஜபுத்ர நாட்டுப் பெண்ணை
அதன்பின்னர் அவர்மணந்து கொள்ள லானார்.
அவள்வயிற்றில் பிறந்தவளாம் லவங்கி என்பாள்,
நதியலைகள் தாலாட்டும் மலரைப் போன்றாள்,
நாட்குறிப்புக் குதவுகின்ற நிலவைப் போன்றாள்.

எட்டுச்சாண் தங்கமவள் அங்கம்; தெங்கின்
இளநீர்போல் பால்மேடு, பருவமேடு;
வட்டமிட்ட வெண்ணிலவைப் பாதியாக
மடித்ததுபோல் அவள்நெற்றி; முகத்தின் வெற்றி:
கட்டாணி முத்தைப்போல் பற்கள்; கோவைக்
கனியைப்போல் வாயிதழ்கள்; கருப்பைக் குள்ளே
திட்டமிட்ட படியமைக்கப் பெற்ற முப்பத்
திரண்டுவகை உறுப்புகளும் கரும்பின் கட்டு.

அக்காடும் இக்காடும் ஆலங் காடும்,
ஆர்க்காடும் மாங்காடும் திருவேற் காடும்,
பொய்க்கோபம் தனைக்காட்டும் இந்த கோபப்
பூச்சிகளின் இருப்பிடமாம் முல்லைக் காடும்,
மக்கட்கு நிழல்கொடுக்கும் இயற்கைக் காடாம்.
மங்கையவள் முக்காடோ செயற்கைக் காடாம்.
நெய்க்கூந்தல்,குதிகாலைத் தொடுமாம்! செம்பொன்
நிறப்பூக்கள் கருங்குழலைத் தொடுவ துண்டாம்!