அமுதும் தேனும்
68
ஆண்மக்கள் இல்லையெனில் வீர மில்லை
அகிலத்தில் பெண்களின்றேல் கவர்ச்சி இல்லை.
ஆண்பாலும் பெண்பாலும் கலந்தா லன்றி
ஆனந்தக் களிப்பேது புவியின் மீது?
தீண்டத்தான் நாமெல்லாம் பிறந்தோ மன்றித்
திண்டாமல் வாழ்வதற்கோ பிறந்தோம்" என்றான்
தீண்டாமல் உறவில்லை உணர்ச்சி இல்லை,
தீண்டாமை வேண்டாமை என்றான் கற்றோன்.
மான்வளர்த்தால் கத்தூரி கிடைக்கும்; ஆல
மரம்வளர்த்தால் நிழல்கிடைக்கும்; கூடு கட்டித்
தேன்வளர்த்தால் சுவைகிடைக்கும்; கல்வி என்னும்
செல்வத்தை நாம்வளர்த்தால் பெருமை சேரும்;
தேன்வளர்த்தோ, மான்வளர்த்தோ காட்டி டாமல்
தீண்டாமை வளர்ப்பானேன்? தலையின் மீது
பேன்வளர்த்துக் காட்டுவதோ நாக ரீகம்?
பேதமையன் றோ! என்றான் வீர வேந்தன்.
பெருங்கவிஞன் "ஆம்அரசே; ஆம்ஆம்" என்றான்.
பின்னரந்தப் புலிவேந்தன் கவியை நோக்கி,
"இருளதனை விலைகொடுத்து வாங்கும் மூடன்
இப்புவியில் யாரென்று" கேட்க லானான்.
மருத்துவத்தால் தீராத நோய்கள், தெய்வ
மகத்துவத்தால் தீருமெனச் சொல்வோன் என்றான்.
அருத்தமற்ற சத்தமெது கவியே என்றான்.
அச்சத்தம் மந்திரத்தின் சத்த மென்றான்.