75
கவிஞர் சுரதா
அரும்புகொப் புளித்ததுபோல் சிரித்துப் பேசும்
ஆரணங்காம் தன்மகளை, ஒவ்வோர் நாளும்
கரும்புகொப் புளித்ததுபோல் பாக்கள் பாடும்
கம்பர்மகன் காதலித்து வந்திட் டானாம்.
இரும்புகொப் புளித்ததுபோன் றிருந்த சோழன்
இதையறிந்து காதலனைக் கொன்றிட்டானாம்.
நரம்புகொப் புளிக்கின்ற காதல் வேகம்
நானறிவேன்: சோழன்தான் அறிந்தா னில்லை.
மதம்வேறு பட்டாலும், காதல் கொண்டோர்
மனம்வேறு படுவதில்லை. கெடுவ தில்லை.
நதியோடிக் கடலில்தான் கலக்க வேண்டும்.
நன்னீரில் அனிச்சந்தான் மலர வேண்டும்.
அதிகாரம் என்னுடைய கையில். ஓர்சாண்
அகலமுள்ள வெண்ணிலவோ இரவின் கையில்,
புதுநாளின், முகவுரையோ காலை வெய்யில்.
பொறுப்புக்கள் இனியுங்கள் இருவர் கையில்.
வரவேற்புக் குரியவனே கீர்த்தி சேர்த்து
வருகின்ற பாவலனே நாடே போற்றும்
அரசாங்கக் கவிஞன்நீ. மேலும் நீயோர்
ஆணழகன். பேச்சாளன். தர்க்க வாதி.
பரிசாக என்னிடம்நீ பெறவிரும்பும்
பாவைஇவள் புகழ்பெற்ற திருவெம் பாவை.
சரியான கலப்புமணம் இதுதான் இன்பத்
தடாகத்தில் தாமரைப்பூ முகம்பார்க் கட்டும்!