அமுதும் தேனும்
8
முத்துடுத்த வானத்தின் மீது தோன்றும் மூத்தநிலா வெளிச்சத்தில், முத்த மென்னும் ஒத்திகையை உருவாக்கி, இன்பக் காதல் உணர்ச்சியினை விரைவாக்கி, இமையில் ஏறும் நித்திரையை குறைவாக்கி, நீண்ட நேரம் நிழலிரண்டை ஒன்றாக்கிக் கொண் டிருந்தார். தித்திக்கும் தெள்ளமுதம் உண்ட பின்னர்த் திறந்தவெளி அரங்கத்தில் உலாவ லானார்.
சத்தென்றால் உள்ளதென்று பொருளாம்; உன்னைத்
தழுவியபின் நானதனை அறிந்து கொண்டேன்.
சித்தென்றால் தன்னைத்தான் அறிவ தென்பர்.
தினையளவே நானென்னை அறிவேன்; சிப்பி
முத்துக்கும் ஒளிவழங்கும் முத்தே! என்றன்
மூச்சாக இருப்பவளே! முல்லைப் பூவே!
சத்தத்தில் இவ்வுலகம் பிறந்த தென்பர்.
தங்கத்தில் நீபிறந்தாய்! அதுவே உன்தாய்!
ஏடறிந்த கொக்கோக விளக்க மெல்லாம்
இன்றேநான் உன்னிடத்தில் அறிந்து கொண்டேன்.
கூடறிந்த குயிலேகேள்; நிலவின் கொம்பு
கூடட்டும் ஒடட்டும் பத்து நாட்கள்.
நாடறிந்த மணமேடை மங்கை யாக்கி
நானுன்னை ஏற்கின்றேன் என்று கூறிச்
சூடறிந்த பகல்மாற்றும் இரவில், அன்னோன்
தும்மலெனப் புறப்பட்டான் சித்தூர் நோக்கி.