பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

"செங்கோல் செலுத்தும் வேந்தர்கள் அறம் புரிவார்கள். குடிமக்களுக்கு எளியராக இருப்பார்கள். குடிகளுக்கு ஏதேனும் குறை இருந்தால் அவர்கள் அதை முறையிடுவதற்கு வருவார்கள். அந்த முறையீட்டைக் கேட்பதற்கு ஆயத்தமாக இருக்கும் அரசர்கள் எப்போது மழை வேண்டுமென்று விரும்பினாலும் பெய்யும் என்று பெரியோர் கூறுவர். முறை வேண்டும் பொழுது முன் நிற்கும் அரசர் உறை (மழைத்துளி) வேண்டும்பொழுது மழையும் முன்னிற்குமாம்."

அரசன் யோசனையில் ஆழ்ந்தான். சிலநாட்களாகத் தன்னைப் பார்க்க வேண்டுமென்று சில குடிமக்கள் விரும்பியபொழுது, அமைச்சர்களை விட்டு விடை சொல்லி அனுப்பியது அவன் நினைவுக்கு வந்தது.

"அரசன் ஒவ்வொரு கணமும் குடிமக்களுக்காக உயிர் வாழ்கிறான். அவன் பிடிக்கும் குடை மற்றவர்கள் வெயிலுக்குப் பிடிக்கும் குடையைப் போன்றது அன்று. தன்னுடைய அருளினால் குடிமக்களை யெல்லாம் அரவணைத்துப் பாதுகாப்பதற்கு அடையாளம் அது. வெயில் மறைக்க நிற்பதன்று, அந்தக் குடை; வருந்திய குடி மறைப்பது.”

அரசனுக்குப் புலவர் பேச்சுக்குள்ளே தனக்கு அறிவுரை ஒன்று இருப்பது தெரிந்தது. தன்னுடைய கடமையை அவர் எடுத்து வற்புறுத்தவே வந்திருக்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டான்.

"கூர்வேல் வளவ, அரசர்கள் படைகளைத் திரட்டிப் பகைவர்களோடு பொருது வெற்றி பெறுகிறார்கள். பெரிய பெரிய படைகளையெல்லாம் பாதுகாத்து வெற்றி அடைவது எதனாலே? உழுபடையால் விளைந்த விளைவின் பயன் அது. உழவர் உழுது நெல் விளைக்க, அதனைக் கொண்டு வீரர்களைப் பாதுகாக்கிறான் அரசன்.