பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108



ஆனால் என்று ஏதோ தடை சொல்ல வருகிறீர்களே! இவனை நான் நன்றாகக் காப்பாற்ற மாட்டேன் என்ற ஐயம் உங்களுக்கு உண்டாகிறதோ?”

"அப்படி நான் சொல்வேனா? எங்கள் வீட்டில் கிடைப்பதைவிட ஆயிரம் மடங்கு நன்மை இங்கே கிடைக்கும் என்பதை நான் அறியமாட்டேனா? இவன் கவி பாடப் பழகியிருக்கிறான். இன்னும் இலக்கண இலக்கியங்களில் போதிய ஆழம் வேண்டும். இப்போது தான் பாடம் கேட்டு வருகிறான். ஒருவாறு சொல்ல வேண்டிய பாடங்களைச் சொல்லிய பிறகு இவனை அழைத்து வந்து இவ்விடத்தில் அடைக்கலமாய் விட்டு விடுகிறேன்.”

"இவன் தங்களிடம் பாடம் கேட்க வேண்டுவது மிகவும் இன்றியமையாததே. அந்தக் காரணத்தைக் கொண்டு நீங்களே அடிக்கடி இங்கே வந்து பாடம் சொல்லிக் கொடுங்கள். உங்களோடு உரையாடும் இன்பமும் எனக்குக் கிடைக்கும். அதுமட்டும் அன்று. இங்கே எவ்வளவோ புலவர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு நூலில் ஆழ்ந்த புலமையுள்ளவராகப் பலர் வருவர். அவர்களைக் கொண்டு சில நூல்களை இவனுக்குக் கற்பிக்கச் செய்வேன்.”

மருத பாண்டியருக்குக் குழந்தையிடத்தில் உண்டான அன்பு உரம் பெற்றது என்பதைப் புலவர் அறிந்தார். அரசரிடம் எவ்வளவு நேரம் வாதாட முடியும்? கடைசியில் புலவர் தம் மகன் அரண்மனையிலே வளர்ந்து வருவதற்கு இசைந்தார்.

அன்றுமுதல் சர்க்கரைப் புலவருடைய குமாரர் மருத பாண்டியருடைய வளர்ப்புப் பிள்ளையாக வளர்ந்தார். அவருக்குச் சாந்துப் புலவர் என்பது இயற் பெயராக இருந்தாலும் யாவரும் அவரை அன்போடு 'குழந்தை' என்றே அழைக்கலாயினர். பிறகு, குழந்-