பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111


"சடையப்ப வள்ளல் நல்ல கலையுணர்ச்சி உள்ளவர். தமிழுக்கு அடிமையாகி விடுபவர். கலைத் திறமை உள்ளவர்களைக் கண்டால் அன்னையினும் அன்பு வைத்துப் பாதுகாப்பவர். ஒரு மாதத்துக்கு முன் அவருடைய கலையுணர்வையும் செல்வப் பெருமையையும் தெரிவிக்கும் செய்தி ஒன்று நிகழ்ந்தது. அது மன்னர்பிரான் திருச் செவியை எட்டியிருக்கக் கூடும்" என்றார் வேளாளராகிய அமைச்சர் ஒருவர்.

"என்ன அது?" என்று ஆர்வத்தோடு வினவினான் வேந்தன்.

"வடநாட்டிலிருந்து அருமையான துகில் ஒன்று கொணர்ந்தான், ஒரு வணிகன். அது மிக மெல்லியதாய் அருமையான பூவேலைப்பாடு உடையதாய் இருந்தது. சரிகையால் கரையிருந்தால் உறுத்து மென்று, பட்டாலே பூத்தொழில் செய்திருந்தான். பல காலம் முயன்று நெய்த அதைத் தக்க விலைக்கு விற்க வேண்டுமென்று எண்ணின அவன், தமிழ் நாட்டில் விலைபோகும் என்று வந்தானாம்."

அரசன் இடை மறித்து, "அவன் நம்மிடம் வர வில்லையே!" என்றான்.

"சடையப்ப வள்ளலைப் பற்றிக் கேள்வியுறாவிட்டால், ஒருகால் இங்கே வந்திருக்கக் கூடும். ஆனால் அவன் அப் பெரியாரிடம் சென்றதனால் சோழநாட்டின் பெருமை எங்கும் பரவ இடம் உண்டாயிற்று" என்றார் அமைச்சர்.

"நீங்கள் சொல்வது விளங்க வில்லையே!" என்று கேட்டான் சோழ மன்னன்.

"இந்த ஆடையை விலை கொடுத்து வாங்குவார் உலகத்திலே சிலர்தாம் இருக்கக்கூடும். பல நாடுகளில் திரிந்து ஒருவரையும் காணாமல் இங்கே வந்தேன். இதை நெய்ய மேற்கொண்ட உழைப்புக்கு