பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

மேலே விற்பதற்காகத் திரியும் சிரமம் அதிகம்' என்று கூறிக்கொண்டு வந்த அந்த வணிகனைச் சடையப்பரிடம் சிலர் அழைத்துச் சென்றார்களாம். அவர் அந்தத் துகிலைப் பார்த்ததும் அதன் வேலைப்பாட்டை உணர்ந்து கொண்டார். அந்தக் கலைஞனைப் புகழ்ந்தார். அவன் கேட்பதற்கு மேற்பட்டே பொன் தந்தாராம்.”

'இப்போது அந்தக் கலைஞன் எங்கே?'

"ருசி கண்ட பூனை உறியை எட்டி எட்டித் தாவும் என்பதுபோல இன்னும் சிரமப்பட்டு இத்தகைய ஆடைகளை நெய்து, தமிழ் நாட்டில் விலைப்படுத்தலாம் என்று எண்ணிப் போயிருப்பான்." .

"சோழ நாட்டின் பெருமையை அவன் மற்ற நாட்டில் போய்ச் சொல்லுவான் என்றது இதனால்தானா?”

"அதுமட்டும் அன்று; சோழ நாட்டில் உள்ள ஒரு குடிமகனாரே இதற்கு விலை கொடுத்தாரென்றால், அத்தகைய பலர் வாழும் சோழ நாட்டுக்கு அரசராக வீற்றிருப்பவர் எத்தனை செல்வராக இருப்பாரென்று அவன் வியப்புற்றானாம்.”

அரசன் புன்னகை பூத்தான். பிறகு, "அந்தத் துகிலை நாமும் பார்க்க விரும்புகிறோம். சடையப்ப முதலியாரை வருவித்து அளவளாவும் ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கும்" என்றான் அரசன் குறிப்பை அறிந்த அமைச்சர் சடையப்ப வள்ளலுக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது அவர் துடையில் ஒரு சிலந்தி உண்டாகி, அதனால் எங்கும் செல்ல முடியாமல் இருந்தார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சோழ மன்னனுக்கு அந்த துண்துகிலைப் பார்க்கும் ஆர்வமும், முதலியார் விரைவிலே குணமடைய வேண்டும் என்ற விருப்பமும் அதிகம் ஆயின.