பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114



"சிலந்தியின் தொல்லை இன்னும் சிறிது இருக்கிறது" என்றார் முதலியார்.

"அடடா! அப்படியானால் ஏன் அவசரப்பட்டு இங்கே வரவேண்டும்? உங்கள் மேனிக்குத் துன்பம் உண்டாக்கும் அந்தச் சிலந்தியைப் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால் துடையில் அல்லவா இருக்கிறது?"

“என் தாய் கூறுவது போலல்லவா அரசர் பெருமான் அன்புரை இருக்கிறது? இத்தனை உள்ளன்புடையார் விருப்பத்தை நிறைவேற்றுவது என் கடமை.”

அமைச்சர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. திடுக்கிட்டார்கள்.

"மன்னர் பிரானுடைய பார்வை பட்டால் கொஞ்ச நஞ்சம் இருக்கும் புண்ணும் ஆறிப்போகும்” என்றார் முதலியார்.

மன்னனுக்கே, ஏன் இப்படிச் சொன்னோம் என்ற சங்கடம் உண்டாகிவிட்டது.

"அரசர்பிரான் திருவுள்ளப்படியே அந்தப் புண்ணைக் கண்ணால் குளிர்ந்து பார்த்துப் போக்கட்டும்.”

இவ்வாறு சொன்ன முதலியார் உடனே துடை யில் சிலந்தி இருந்த பக்கத்தைச் சிறிதளவு கிழித்தார். இரண்டு கைகளாலும் துகிலைப் பற்றி அந்தத் துவாரத்தின் வழியே, ஆறிவரும் புண் தெரியும்படிச் செய்தார். மன்னனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. புண்ணைக் கண்டல்ல. அத்தனை பொன் கொடுத்து வாங்கிய ஆடையை, மிகவும் அலட்சியமாகக் கிழித்துவிட்டதைக் கண்டு திடுக்கிட்டான். அமைச்சரும் பிறரும் ஒரே ஆச்சரியத்தில் மூழ்கினர்.

"என்ன, இதைக் கிழித்துவிட்டீர்களே' என்றான் அரசன்.