பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

எண்ணினான். சிறிது நேரம் கழித்து யாவரும் அந்தப் பண்ணின் இனிமையில் ஆழ்ந்து போனார்கள்.

பாணன் வாசித்துக்கொண்டே போனான். அவனுடைய மருதப் பண் இசையிலே காலை நேரத்தின் அமைதி பரவியது. தாமரை மலர் மலரும்போது வண்டுகள் மெல்லென்ற ஒலியோடு அதில் புகுவது போன்ற நினைப்பு உண்டாயிற்று. எங்கும் புது விழிப்பும் கலகலப்பும் முளை விடுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. கீழ் நிலையிலிருந்து மெல்ல மெல்ல மேலே ஏறினான். கூட்டில் இருந்த பறவை சிவ்வென்று மேலே போகிற மாதிரி இருந்தது. ஆடாமல், அசையாமல் பாணன் பாடினான். அனைவரும் கேட்டார்கள். பாட்டு ஒரு வகையாக முடிவு பெற்றது. மருதப் பண்ணென்னும் இசைக் கடலின் மறுகரை இன்னும் தெரியவில்லை. சிறிது நேரம் கேட்டவர்களுடைய மனம் மருதப் பண்ணுேடே உலவிக் கொண்டிருந்தது. இனி அடுத்த பாட்டு ஆரம்பமாக வேண்டும்.

அதற்குள் நள்ளி மருதப் பண்ணிலே ஆழ்ந்து கிடந்த மயக்கத்திலிருந்து விழித்து எழுந்தான். "அருமையிலும் அருமை! மருதப் பண் காலை நேரத்தையே இப்போது இங்கே கொண்டு வந்து விட்டது. பாணர் இது மாலை என்பதை மறந்து மருதத்தை வாசித்தார். நாமும் மாலையை மறந்து காலை என்ற உணர்ச்சியோடு இந்தப் பண்ணைக் கேட்டு இன்புற்றோம். இதுவரையிலும் பலர் பாடி இந்தப் பண்ணைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இது ஒரு தனிச் சிறப்புடையதாக இருந்தது" என்று பாராட்டினன். அந்தப் பாராட்டினூடே, தனக்கு இசையைப் பற்றிய செய்திகளும் தெரியும் என்பதைக் காட்டிச் கொண்டான்.