பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

"வள்ளற் பெருமானே!” என்று வன்பரணர் பேசத் தொடங்கினார். எல்லாருடைய முகங்களும் அவரை நோக்கித் திரும்பின.

"பாணர் தலைவர் இப்போது மருதம் வாசித்ததற்கு ஏதாவது தக்க காரணம் இருக்கும். ஆனாலும் கால மல்லாத காலத்தில் இந்தப் பண்ணை வாசித்தது. அவருடைய புலமைக் குறையென்று தோன்றவில்லை. அதற்கு மூலகாரணம் தங்களுடைய வள்ளன்மைதான்' என்றார் புலவர்.

புலவர் என்ன சொல்லப் போகிறார் என்று எல்லாரும் கூர்ந்து கவனித்தனர்.

"கலைஞர்களைப் போற்றிப் பாராட்டி உணவூட்டி ஊக்கமளிப்பதே தங்களுடைய வாழ்க்கையின் முதற் கடமையாகக் கொண்டிருக்கிறீர்கள். நாங்களெல்லாம் வறுமையோடு உறவாடுகிறவர்கள். நாலு பேரைப் பார்க்க வேண்டுமென்று எண்ணுவோம். சும்மா பார்க்கலாமா? கற்ற வித்தையைக் காட்டிப் பரிசு பெற வேண்டும். ஆதலால் எப்போதும் மேலும் மேலும் பயிற்சி செய்துகொண்டே இருப்போம்."

புலவர் என்ன சமாதானம் சொல்லப் போகிறார் என்று இன்னும் ஒருவருக்கும் புலப்படவில்லை. அவர்களுடைய ஆவல் அதிகமாகிக் கொண்டே வந்தது.

"இங்கே நாங்கள் வந்துவிட்டால் வேளைக்கு வேளை அளவுக்கு மிஞ்சிய உணவு கிடைக்கிறது. அதைச் சாப்பிட்டால் உடனே இளைப்பாற வேண்டியிருக்கிறது. இளைப்பாறி எழுந்தால் மறுபடியும் ஏதாவது சிற்றுண்டி வந்துவிடுகிறது. இப்படி விருந்துண்பதும் இளைப்பாறுவதுமாக இங்கே நாட்களைக் கழித்தால் நாங்கள் கற்ற வித்தையும் இளைப்பாறப் போய்விடுகிறது. யாழ் வாசித்துக்கொண்டே இருக்கும் எங்களவர்களைத் தாங்கள் விருந்து போட்டுச் சும்மா தூங்கப் பண்ணுகிறீர்கள்.